கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு நின்று சென்ற அனைத்து ரயில்களும் கடம்பூர் ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வலியுறுத்தி வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.




கோவில்பட்டி முதல் திருநெல்வேலி வரையிலான இருப்பு பாதையில் கடம்பூர் ரயில் நிலையம் மிக முக்கியமானது. கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களை இணைக்கும் வகையில் உள்ள கடம்பூரில் கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்திற்கு முன்பு முக்கிய ரயில்கள் நின்று சென்றன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஏற்கனவே இங்கு நின்று சென்ற ரயில்கள் கூட தற்போது நிற்பதில்லை.




இதனால் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி அல்லது தூத்துக்குடி, திருநெல்வேலி சென்று ரயில்களில் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு கால விரயம் பணம் விரயம் ஏற்படுவதோடு, குறிப்பிட்ட ரயில்களை சரியான நேரத்துக்கு பிடிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பஅறிவிக்கப்பட்டது.




இதுதொடர்பாக தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு வியாபாரிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடம்பூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. கடம்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.




இதில், கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு கடம்பூர் ரயில்வே நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள் புனலூர் - மதுரை (16730 - 16729), கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (16824 - 16823), தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்(16235 - 16236), நாகர்கோவில் - மும்பை (16352 - 16351) ஆகிய ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தங்களின் நீண்ட கால கோரிக்கையான குருவாயூர் - சென்னை (16128 - 16127) ரயில் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது தொடர்பாக தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு 3 முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் கடம்பூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டத்தையொட்டி மணியாச்சி டிஎஸ்பி லோகேஷ்வரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.