சீர்காழியில் காவல்துறையினரின் தடையை மீறி பள்ளி நேரங்களில் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வண்ணம் சென்ற 5 லாரிகள் மடக்கி பிடித்து போக்குவரத்து காவல்துறையின் அபராதம் விதித்து லாரியை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மணல் லாரிகளால் இடையூறு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய பகுதிகளில் தனியார் சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த சவுடு மண் குவாரிகளில் இருந்து விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு சீர்காழி நகர் பகுதி வழியாக லாரிகளில் மணல் ஏற்றிச் லாரிகள் வேகமாக சென்று வருவதால் போக்குவரத்து இடையூறும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
தடை செய்யப்பட்ட நேரம்
குறிப்பாக சீர்காழி நகருக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பள்ளி நேரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வர போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளனர். அதனையும் மீறி சவுடு மணல் லாரிகள் செல்வதால் வாகன ஒட்டிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். பள்ளி நேரங்களில் லாரிகள் சென்றுவர தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் வலியுறுத்தினர்.
சிக்கிய லாரிகளுக்கு அபராதம்
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சீர்காழி போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவலர்கள் அண்ணாமலை மற்றும் போலீசார் தென்பாதி உள்ள தனியார் பள்ளி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பள்ளி நேரத்தில் நகரில் சென்று வந்து கொண்டிருந்த 5 மணல் லாரிகளை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் இவ்வாறு தொடர்ந்து பள்ளி நேரங்களில் லாரிகள் சென்று வந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பரிந்துரையின் படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஓட்டுனர்களை எச்சரித்து அனுப்பினர்.
Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
காவல்துறையினரின் எச்சரிக்கையை பொருட்ப்படுத்தாத லாரி ஓட்டுனர்கள்
இருந்த போதிலும் காவல்துறையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத லாரி ஓட்டுனர்கள் தொடருந்து தடைப்பட்ட நேரங்களில் நகரப்பகுதிக்குள் மணல் லாரிகளை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு மீண்டும் சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் சீர்காழி சட்டநாதபுரம் உப்பானறு பாலம் அருகில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் வாகன தனிக்கோயில் ஈடுபட்டனர்.
அப்போது தடை மீறி மணல் ஏற்றி வந்த ஐந்து லாரிகளை பிடித்து ஓட்டுநர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதமும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர். மேலும் அதில் மது போதையில் லாரியை இயக்கிய தரங்கம்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். காவல்துறையினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.