மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான பிரதான சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒரு மாதத்திற்குள்ளாகவே தார் பெயர்ந்து சேதமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சாலையை முழுமையாக மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும் என்றும், தரக்குறைவான பணிகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் முழக்கமிட்டனர்.

Continues below advertisement

சாலைத் திட்டத்தின் பின்னணி

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்வரும் புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான இந்தச் சாலையை, ஆதமங்கலம், காடாகுடி, புங்கனூர், பெருமங்கலம், ரெட்டி கோடங்குடி, மருதங்குடி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகச் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்ததால், பொதுமக்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இந்தச் சாலையைப் புதுப்பிக்க அரசு ஆணையிட்டது. இதன்படி, சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலான இச்சாலையை ரூ. 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது.

ஒரு மாதத்திற்குள் பெயர்ந்த சாலை

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைக்கப்பட்ட இந்த புதிய சாலை, தரமற்ற கட்டுமானப் பொருட்களால் அமைக்கப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை அமைக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பல இடங்களில் தார் கலவை பெயர்ந்து, ஜல்லிக் கற்கள் வெளியேறி, போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் மீண்டும் சேதமடையத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

இந்நிலையில், புங்கனூர் பகுதியில் மட்டும் சேதமடைந்த சாலையின் ஒரு பகுதியை மீண்டும் சீரமைப்பதற்கான பணிகள் திடீரென மேற்கொள்ளப்பட்டன. இத்தகவல் ஆதமங்கலம், புங்கனூர், ரெட்டி கோடங்குடி, காடாகுடி உள்ளிட்ட கிராம மக்களுக்குத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குக் திரண்டனர்.

ஆவேசப் போராட்டம்

புதிதாக அமைக்கப்பட்ட முழுச் சாலையுமே தரமற்று இருக்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கண்துடைப்பிற்குச் சீரமைப்புப் பணியை மேற்கொள்வதைக் கண்டித்து பொதுமக்கள் அப்பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

  • புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரையிலான சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு புதிதாகப் போடப்பட்ட முழுச் சாலையையும் தரமாக மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும்.
  • சாலைத் தரத்தைப் பரிசோதிக்காமல், அலட்சியமாகச் செயல்பட்டு, தரக்குறைவான சாலை அமையக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளின் சமாதானம்

பொதுமக்களின் போராட்டத்தைப் பற்றி தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் மற்றும் சீர்காழி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அதிகாரிகள், புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரை சேதமடைந்த சாலைப் பகுதிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் களையப்பட்டு, மீண்டும் முழுமையாகச் சீரமைத்துத் தரப்படும் என்று உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், தற்காலிகமாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர் போராட்டம் குறித்த எச்சரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், "ஆதமங்கலம் முதல் புங்கனூர் வரை ரூ. 2 கோடிக்கு மேல் செலவில் போடப்பட்ட சாலை ஒரு மாதத்திலேயே பெயர்ந்து பயனற்றுப் போனது அரசின் பணத்தை வீணடித்த செயல். அதிகாரிகள் உறுதி அளித்தபடி, இந்தப் பாதையை முழுமையாகவும், தரமாகவும் மீண்டும் சீரமைக்கத் தவறினால், நாங்கள் காவல்துறை அனுமதியோடு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி, சிதம்பரம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.