மகளிர் உரிமை தொகை
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது மகளிர் உரிமை தொகை. அந்த வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1 கோடியே 13 லட்சத்து 75ஆயிரத்து 492 மகளிர்களுக்கு உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
மகளிர் உரிமை கேட்டு 29 லட்சம் பேர் விண்ணப்பம்
சுமார் 29 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து விண்ணப்பத்தை சரிபாக்கும் பணி முடிவடைந்த நிலையில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார். சுமார் 17 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணியானது இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. இதுவரை 30,838 கோடி நிதி மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது
வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 1000 ரூபாய்
2023 -24 ஆம் ஆண்டு 8123 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் 7926 கோடி நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. 2024-025 ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 13 ஆயிரத்து 790 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டான 2025ஆண்டில் நவம்பர் மாதம் வரை 13 ஆயிரத்து 811 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 9121 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலையிலேயே புதிதாக மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.