தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இயக்குநர் ரத்னகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
எல்லாரும் வாழ்த்துவது போல இவரும் வாழ்த்தியிருக்கிறார் என நினைக்க வேண்டாம். இந்த வாழ்த்து ரொம்ப ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியுள்ள ரத்னகுமார் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். ஜெயிலர் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதை சொன்னார். இது நடிகர் விஜய்யை தான் குறிப்பிட்டு சொல்லப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
அடுத்ததாக நடிகர் விஜய்யின் லியோ பட விழாவில் பேசிய இயக்குநர் ரத்னகுமார் கழுகை விமர்சிக்கும் வகையில் ஒரு கதை சொன்னார். இது ரஜினிக்கு பதிலடியாக பார்க்கப்பட்டது. ஆனால் லால் சலாம் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்திருந்தார். இப்படியான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் அவர் இயக்கிய படங்களில் பணியாற்றி வந்தார்.
ஆனால் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவில்லை. இதற்கு ரஜினியை விமர்சித்து அவர் பேசியதே காரணம் என சொல்லப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்னகுமார் இயக்கவுள்ள 29 படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ரத்னகுமார் ரஜினியை விமர்சித்ததாக கூறப்பட்ட விஷயத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அப்படி பேசியிருக்கக்கூடாது என கண்டித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக திரையுலகினர், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்த் எப்போதும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். ஒரு நடிகராக இருந்தாலும் சரி, பேச்சாளராக இருந்தாலும் சரி, அவர் பலருக்கு உத்வேகம் அளித்துள்ளார். #29TheFilm என்ற யோசனை கூட அதற்குரிய கதையைக் கொண்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டே இருங்கள்” என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்பத்தான் நீங்கள் சரியாக நடந்து கொள்கிறீர்கள் என பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் நீங்கள் யார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.