மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தார்காடு பகுதியில் மயிலாடுதுறை ரயில்வே நிலைய ஜங்ஷன் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சென்னை, கோவை, திருச்சி இன்னும் பல மார்க்கங்களில் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் அவ்வாறு வரும் ரயில்களில் மோதி அவ்வப்போது எதிர்பாரத உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
பெரும்பாலும் அதிகளவில் மாடு உள்ளிட்ட கால்நடைகளே ஓடும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் நடைபெறும். ஆனால் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தினால் சிலர் ரயில் முன் பாய்ந்தும், தண்டவாளங்களில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் மயிலாடுதுறையில் இருந்து கோயமுத்தூர் செல்லும் ஜனாசதாப்தி தினசரி ரயில் மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு உள்ளது.
அப்போது 4 -வது நடைமேடையில் இருந்து புறப்பட்ட ரயிலின் முன்பு திடீரென ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் விழுந்த அந்த நபரின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து ரயில் புறப்பட்டு கோவையை நோக்கி சென்றது. தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர், மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் 40 வயதான மகன் ஆறுமுகம் என்பதும், சமையல் கலைஞரான இவர், தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை ரயில்வே காவல் ஆய்வாளர் சிவவடிவேல் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், எதற்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல, அப்துல்கலாம், வாஜ்பாய் போன்ற பெரும் தலைவர்கள், ஆளுமைகளும் திருமண செய்து கொள்ளாமல் மக்களுக்காக வாழ்த்து பல நன்மைகளை செய்துள்ளனர். திருமண மட்டுமே மனித வாழ்க்கை இல்லை என்பதை இது போன்ற இளைஞர் உணர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)