இயக்குநர் வசந்த் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி 23 வருடங்கள் ஆகின்றன. அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மனிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடித்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். இந்தப் படத்திற்கு இன்றுவரை நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை ரிதம் படத்தை நீங்கள் திரும்பப் பார்க்க நினைத்தால் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து பார்க்கலாம்


ரிதம்


தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்


தண்ணீர் கரையில் முடிக்கிறோம்


என்கிற வரிகளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். வாழ்க்கை தொடங்குவது, வாழ்க்கை முடிவது என்பதைப் பற்றியது தான் இந்தப் படத்தின் கதை. ஆனால்  நாம் நேசித்தவர்களின் வாழ்க்கையோடு சேர்த்து அவர்களுடனான உறவும் இறந்துவிட்டதை  நினைத்து நமது வாழ்க்கையையும் தேக்கி வைத்துவிடுகிறோம். அதை மறுபடியும் புதிதாக ஆரம்பிக்க முடியும் என்பதே ரிதம் படத்தின் கதையின் சாரமாக இருக்கிறது.


கதை


இந்தியன் எக்ஸ்பிரஸில் ஃபோட்டோ எடிட்டராக வேலை செய்பவர் கார்த்திகேயன் (அர்ஜுன்). வேலை மாற்றலாகி புதிதாக மும்பைக்கு  குடிவருகிறார். ஒரு புதிய வங்கி கணக்கு வேலையாக சித்ரா (மீனா) வேலை செய்யும் வங்கிக்கு செல்கிறார் அர்ஜுன். சித்ராவின் டேபிளில் வைத்திருக்கும் புத்தகத்தைப் பார்த்து அவர் தமிழ்க்காரர் என்று கண்டுபிடிக்கிறார் கார்த்திக். தொடர்ந்து ஒரு சில இடங்களில் அவரை பார்க்கும் கார்த்திக் அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்.


முன்பின் தெரியாது ஒரு ஆண் தன்னிடம் பேச முயற்சிப்பதை நினைத்து சந்தேகம் படுகிறார். தன்னை தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக சித்ராவிடம் பேசுகிறார் கார்த்திக். போகப் போக கார்த்திக் மற்றும் சித்ராவிற்கு நல்ல நட்பு ஏற்பட அவருடைய பெற்றோர்களைப் பார்க்க கார்த்திக்கின் வீட்டிற்கு செல்கிறார் சித்ரா. கார்த்திக் மற்றும் சித்ரா ஒரே ரயில் விபத்தில் தங்களது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.


அவர்களின் நட்பை திருமணமாக மாற்ற கார்த்திக்கின் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்கிறார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.


வசந்த் ஃபார்முலா


ஒரு நிஜக் கதையே தன்னை இந்தப் படத்தை இயக்கத் தூண்டியதாக இயக்குநர் வசந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஒரு உறவின் பிரிவையும் ஒரு புதிய உறவிற்கான தொடங்குவதற்கான சாத்தியங்களை கொடுக்கும் வாழ்க்கையின் ஒரு அழகானத் தன்மையை வசந்த் மிக அழகாக தனது கதையில் கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இந்தப்  படத்தில் ஒரு சின்ன பயணம் இருக்கிறது.


கார்த்திக்கின் பெற்றோர்களாக நடித்த நாகேஷ் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான உரையாடல்கள் படத்தில் கார்த்திக் அவர்களை சொல்வதுபோல் “ அவங்க ரெண்டுபேரும் கெளண்டமனி செந்தில் மாதிரிதான் என்ன ஒதச்சிக்க மாட்டாங்க” என்பதுபோல் தான். தனது சம்மதம் இல்லாமல் சித்ராவை திருமணம் செய்துகொள்கிறார் ஸ்ரீகாந்த் (ரமேஷ் அரவிந்த்). இதனால் தனது மகனை ஆசீர்வதிக்காமல் வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறார் லக்ஷ்மி. தனது மகன் இறந்ததற்கு காரணம் தான் தான்  என்று குற்றவுணர்ச்சியில் இருக்கும் சித்ராவை தன்னுடன் அழைத்துக் கொள்கிறார்.


ஆனால் கடைசியில் “ சித்ராக்கு என்ன வேணும்னு யோசிக்காம எனக்கு என்ன வேணும்னு யோசிச்சுட்டேன் “ அவரது கதாபாத்திரத்தின் மனமாற்றத்தை மிகச் சரியாக உணர்த்துவதாக இருக்கும். இப்படி படத்தில் தனித்தனியாக காட்சிகளை பேசலாம்.


இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரிதம் திரைப்படம் இயக்குநர் வசந்தின் சிறந்தப் படங்களில் ஒன்று.