CM Stalin : என்னில் பாதி என் மனைவி துர்கா.. தாய் தயாளு, மகள் செந்தாமரை குறித்து நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்..

தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவை எல்லாம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதுவும் தேவையில்லை. உண்மையில் உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான்.

Continues below advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் குடும்ப பெண்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசியது, பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு இனி மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்தம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்களை குறிப்பிட்டார். தொடர்ந்து தற்போதைய திமுக ஆட்சியில் மகளிருக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் குடும்ப பெண்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். 

குடும்ப பெண்கள் பற்றி நெகிழ்ச்சி பேச்சு

தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு இவை எல்லாம் ஒருவருக்கு கிடைத்து விட்டால் வேறு செல்வம் எதுவும் தேவையில்லை. உண்மையில் உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும் தான். என்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவர்கள். சிறு வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்றைக்கு மழை வரக்கூடாது என வேண்டி கொள்வார்.

எனது அரசியல் வாழ்க்கையில் தொடக்க காலக்கட்டத்தில் சிறு சிறு சம்பவங்கள் கூட என் அம்மாவிடம் சொல்லி தான் கலைஞர் கிட்ட சொல்லுவேன். இன்னைக்கு அவங்க வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை போய் பார்க்கும்போதெல்லாம் அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் தான் என்னுடைய மனைவி துர்காவும், என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என்னுடன் இருக்கிறார்கள். 

திருமணமாகி 5வது மாதத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டு நான் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என சொல்லி தன்னை பக்குவப்படுத்தி கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னோட மிகப்பெரிஉய சக்தியாக இருப்பது துர்கா தான். 

அடுத்து என்னுடைய மகள் செந்தாமரை. அன்பின் வடிவம் அவர். நான் எந்த பொறுப்பில் இருந்தாலும் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என இருப்பார். ஒரு அரசியல்வாதியின் மகள் என்னுடைய சாயல் தன் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். சுயமாக வரவேண்டும் என நினைப்பவர். அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கருணைமிகு தாய், தூணாக விளங்கும் மனைவி, தன்னம்பிக்கை கொண்ட மகள் என இந்த மூன்றும் எனக்கு கிடைத்துள்ளது. இதே மாதிரி குணம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola