தமிழ்நாட்டின் இல்லத்தரசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாதம் ரூ.1000 வழங்கும் அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. 


பெண்களை கவர்ந்த திமுக தேர்தல் வாக்குறுதி


கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.


முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் இத்திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 


விறுவிறு முன்னேற்பாடுகள்


இதனிடையே இந்த திட்டத்தில் தகுதியுள்ள குடும்ப பெண்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. ரேஷன்கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் வீடு,வீடாக சென்று விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு 3 கட்ட முகாம்கள் நடத்தி பெறப்பட்டது. பின்னர் இவற்றின் உண்மைத்தன்மை அறிய ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொடுக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது.


திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு ரூ.1, 10 பைசா அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேசமயம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன காரணம் என்பது குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். 


சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே பல பெண்களின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தது தமிழ்நாடு அரசு. 


முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்


இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்குகிறார். அங்குள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர்கள், எம்,எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர். சுமார் 10 பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. முதலமைச்சர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


திமுக முப்பெரும் விழா


ஆண்டுதோறும்  அண்ணா பிறந்த நாள் (செப்.15),  பெரியார் பிறந்த நாள் (செப். 17  மற்றும் திமுக  தோற்றுவிக்கப்பட்ட நாள் (செப்.17) ஆகியவை சேர்த்து திமுக  சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 17 ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.


அந்த விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்க உள்ளார். இந்தாண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திமுக தோற்றுவிக்கப்பட்டு பவள விழா ஆண்டு ஆக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Magalir Urimai Thogai: மொபைலும் கையுமா இருங்க! வங்கி கணக்குக்கு வருகிறது ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!