மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கருவிழந்த நாதபுரம் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் 75 வயதான துரை. இவர் கடைக்கு காரைக்காலில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கதிர்வேல் ஆகிய இருவர் திராட்சை பழம் கேட்டுள்ளனர். ஒரு கிலோ பழம் 120 ரூபாய் என்று துறை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கால் கிலோ திராட்சை கேட்டு விலை அதிகமாக சொல்வதாக கூறி பேரம் பேசி உள்ளனர்.
அப்போது பழக்கடை உரிமையாளருக்கும் பழம் வாங்கியவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் துரையின் மகன் சக்திவேல் அங்கு வரவே தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது தங்களை பழக்கடையைச் சேர்ந்தவர்கள் அடிப்பதாக செல்போனில் தமிழரசன், கதிர்வேல் ஆகியோர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளனர். அதனைத் கேட்ட அவரது நண்பர்கள் காரைக்காலில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அவ்வழியாக வேனில் பாண்டிச்சேரி சென்ற பாடி பில்டர்கள் 20 பேருடன் பழகடைக்கு வந்து முதியவர் என்றும் பாராமல் துரை மற்றும் சக்திவேலை தாக்கி பழக்கடையை சேதப்படுத்தி பழக்கடைக்கு அருகில் இருந்த தமிழ்ச்செல்வி என்பவரின் பெட்டிக்கடையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி அங்கு ரோட்டில் இருந்த வாகனங்களையும் அடித்து உடைத்து விட்டு வேனில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சினிமா பாணியில் அவர்களின் வேனை விரட்டிச் சென்றுள்ளனர். பின்னால் விரட்டப்படுவதை அறிந்த அவர்கள் அச்சத்தில் கண்மூடித்தனமாக வேனை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதனால் ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்களை மோதி சென்றுள்ளனர். இதனை அடுத்து விரட்டி சென்றவர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். அதில் வேன் கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் பாடி பில்டர்கள் சீர்காழி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதனிடையே கருவிழந்தநாதபுரத்தில் இரண்டு கடைகளை மதுபோதையில் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. பாடி பில்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான துரை சக்திவேல் ஆகிய இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக துரை செம்பனார்கோவில் காவல்நிலையத்தில்’ புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரதாப் கர்ணன், தமிழரசன், கதிர்வேல் விக்னேஸ்வரன் பிரதீப்குமார் ஆகாஷ், உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பழம்வாங்க சென்ற இடத்தில் பாண்டிச்சேரி பாடி பில்டர்கள் தகறாரில் ஈடுபட்டு கடையை அடித்து உடைத்து துவம்சம் செய்ததும், சினிமா பாணியில் தப்பி சென்று காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.