சென்னை, நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது“ கலைஞர் நூற்றாண்டை கொணடாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தொழில் நிறுவனங்களின் நாள் மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூக நீதியும். சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கலைஞரின் இரு கண்கள். பெரு நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் ஒரே கொள்கை என்பது அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீர் வளர்ச்சிக்கு ஏற்றது அல்ல என்பதை உணர்ந்தவர் கலைஞர்.


தொழிற்பேட்டைகள்:


இந்தியாவிலே முதன்முதலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தனியாக ஒரு கொள்கையை கொண்டு வந்தார். தொழில்முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்க அனைத்து வசதிகளையும் கொண்டு 1970 ம் ஆண்டிலே சிட்கோ தொடங்கி வைத்தார். இன்று தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கிறது.


சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் நூற்றாண்டு விழா கொண்டாடி கொணடிருக்கும் கலைஞர். அவரது வழியில் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் நம் தமிழ்நாடு அரசு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது.


ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள்:


இந்த திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கான நிலம், கட்டிடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை மூலம் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 6 விழுக்காடு வட்டி மானியம் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இவ்வளவு மானிய சலுகைகளுடன் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவு திட்டங்கள் இல்லை.


திட்டம் அறிவிக்கப்பட்ட 3 மாத குறுகிய காலத்தில் இதுவரை 121 ஆதிதிராவிட பழங்குடியின தொழில்முனைவோருக்கு 24 கோடியே 21 லட்சத்து மானியத்துடன் 45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 100 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்:


தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சிக்காக தனி கவனம் நமது அரசு செலுத்தி வருகிறது. ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரதேவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளமானது கடந்தாண்டு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.


தொழில்முனைவோர்கள் 159 வகை தொழில் உரிமங்களை 27 அரசு துறைகளிடம் இருந்து எளிதில் பெற ஒற்றை சாளர 2.0 முறை தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை 20 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 17 ஆயிரத்து 618 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டு 1903 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக குறுந்தொழில்களை கொண்ட பல குறுங்குழுமங்கள் உள்ளது,நீடித்த நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்திடவும், பாலின சமத்துவத்தை உறுதி செய்திடவும் இந்த குறுங்குழுமங்கள் மேம்படுத்துவது இன்றியமைதாதது.


புதியதாக 6 தொழிற்பேட்டைகள்:


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமது  உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யவும், வளர்நது வரும் தொழில்துறையில் நுழைய வழி செய்யவும் பெருங்குழுமங்கள் அமைக்கப்படும் என்றும் அரசால் அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 4 பெருங்குழுமங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


முதற்கட்டமாக திண்டிவனத்தில் மருந்து பொருட்கள் பெருங்குழுமம், திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும் 6 மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, கோயம்புத்தூர் உள்பட வெளியூர், வெளிமாநில தொழிலாளர்கள் தரமான மற்றும் தங்குமிடம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக அரசு சார்பில் தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக சென்னை, கோவையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.


இவ்வாறு அவர் பேசினார்.