குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதவிர்த்து, குரூப் 1, குரூப் 3 உள்ளிட்ட 19 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, டிஎன்பிஎஸ்சியின் முழு அட்டவணையைக் காணலாம்.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கபப்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் அட்டவணையையும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற அட்டவணை நேற்று இரவு (ஜூன் 26) வெளியாகி உள்ளது.
டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்
இந்த அட்டவணையின்படி, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன.
பிற தேர்வுகள்
77 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் VII- Bக்கான தேர்வு (நிர்வாக அதிகாரி) அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடைபெற்றன. அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
அதேபோல் குரூப் -8 (நிர்வாக அதிகாரி) தேர்வுகளுக்கான அறிவிப்பு மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகி, செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அதே ஆண்டு நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2023 ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
குரூப் 1 தேர்வு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர்.
5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். தொடர்ந்து, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகின. ஆகஸ்ட் மாதத்தில் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
10 பணியிடங்களுக்கான குரூப் 6 தேர்வு (தமிழ்நாடு வனத்துறை துணை வனப் பயிற்சியாளர் பணி) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செயலக சேவை குரூப் V - A பணிக்கான தேர்வு (உதவி பகுதி அலுவலர்) டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இண் நிலையில், தற்போது ஜூலை மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு அட்டவணையைக் காண https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf