எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி ஆண் ஒருவரது உடல் ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று (செப்.21) காலை சென்னையைக் கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை இந்த ரயில் கடக்கும்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ரயில் ஓட்டுநர் ஹாரன் அடித்ததில் பதற்றமடைந்த அந்நபர் தண்டவாளத்தின் மையப்பகுதி நோக்கி தவறுதலாக நடந்துள்ளார். அப்போது என்ஜினின் முன்பக்க கொக்கியில் அவரது தலைப்பகுதி சிக்கியதில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், ரயில் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிய அந்நபரின் உடல் ரயிலில் தொங்கியபடி இழுத்துவரப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளித்தார்.
இதையடுத்து கும்மிடிப் பூண்டி ரெயில் நிலையத்தில் சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து என்ஜினின் முன்புறம் தொங்கியபடி 6 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட அவரது உடலை ரயில்வே காவலர்கள் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே, தண்டவாளம் அருகே நடந்து சென்ற ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் முன்னதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் அருகே நண்பர்களுடன் வசித்து வந்த விஜய் (வயது 27), சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தினமும் இவர் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தைத் தாண்டி தனது வீட்டிற்கு செல்வார். முன்னதாக அவர் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே தண்டவாளத்தைக் கடந்து வீட்டுக்கு செல்லும்போது ஹெட்செட் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தைக் கடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் விஜய் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்பு இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இததகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் ரயில்வே காவலர்கள் அவர்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: House of the Dragon: நம்ம வீட்டுப் பெண் ரெனேராவோட கல்யாணம்... பாரம்பரிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் கல்யாணம்... மீம்ஸ் இறக்கும் நெட்டிசன்கள்!