கடந்த சில நாட்களாக திமுக எம்.பி. ஆ. ராசா இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறி அவர் மீது வழக்கு மேல் வழக்கு, சமூக ஊடங்களில் கண்டனம் என குவிந்து வருகிறது. இந்தநிலையில் ராஜராஜ சோழன் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை கைப்பற்றி பிராமணர்களுக்கு கொடுத்தாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. 


இதுகுறித்து நேற்று சென்னையில் திமுக எம்.பி. ஆ ராசா ஒரு நிகழ்ச்சியின்போது பேசுகையில், “ராஜராஜ சோழனா இருக்கட்டும், ராஜேந்திர சோழனா இருக்கட்டும் எத்தனை லட்சம் நிலங்களை சதுர்வேதி மங்கலமாக மாற்றி இருக்கிறார்கள். இது நான் சொல்லவில்லை உ.வே. சாமிநாதர் ஐயர் எழுதி இருக்கிறார்.


ராஜராஜ சோழன் குறித்து திமுக எம்.பி. ஆ ராசா பேசியது:



உத்தமதானபுரம் என்கிற ஊர். அந்த ஊரில் ஒரு சோழ அரசன் சென்று தங்குகிறான். அவருக்கு ஓதுகின்ற புரோகிதர்கள், பிராமணர்கள் ஏகாதேசி அன்று நீ அன்னம், தண்ணீர், ஆகாரம் சாப்பிடக்கூடாது என்று அந்த அரசனிடம் தெரிவித்தனர். அப்படி நீங்கள் இருந்தால் உங்கள் ஆயுள் நீளும். அந்த அரசரும் ஒவ்வொரு மாதமும் விரதத்தை கடைப்பிடிக்கிறார். 


ஒருநாள் உத்தமதானபுரத்திற்கு அந்த அரசர் சென்றபோது தெரியாமல் வெற்றிலை பாக்கு சாப்பிட்டு விட்டார். உடனடியாக அரசர் ஓடிச்சென்று, சாமி நான் தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் என்றார். இதைகேட்ட புரோகிதர்கள், ஒன்னும் பிரச்சனை இல்லை. 45 பிராமணர்களுக்கு தலா 7 ஏக்கர் நிலம், அனைவருக்கும் வீடு கொடுங்கள் என்று சொன்னார்கள். இதற்கான கல்வெட்டு இன்னும் இருக்கு. 


சதுர்வேதி மங்கலம் எது..? முக்குலத்தோர், பறையர், பள்ளர் என அனைத்து சமூகத்தினரின் நிலத்தை புடுங்கி, 4 வேதங்களை கற்று இருந்த பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான நிலத்தை ராஜராஜ சோழன் கொடுத்தான். ராஜேந்திர சோழன் கொடுத்தான் இது எல்லாம் எங்கள் சொத்து. கேட்டால் இப்ப இலவசங்கள் கூடாது என்று சொல்கிறார்கள்” என பேசியுள்ளார்.