பாகிஸ்தான் மகளிர் கால்பந்து அணியினர்  ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பிய நிரூபரின் பேச்சு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்று வருகிறது.


காத்மாண்டுவில் நடந்து வரும் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ்தான் மகளிர் கால்பந்து அணி ஏழு கோல்கள் வித்தியாசத்தில் மாலத்தீவை முன்னதாக வீழ்த்தியது. மேலும் இந்தப் போட்டியில் ஏழு கோல்களில் நான்கு கோல்களை பிரிட்டிஷ்-பாகிஸ்தான் கால்பந்து வீராங்கனையான நதியா கான் என்பவர் அடித்து அசத்தினார்.






சர்வதேச போட்டிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பங்கேற்றுள்ள பாகிஸ்தான் மகளிர் கால்பந்து அணி, கடந்த எட்டு ஆண்டுகளில் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.


இச்சூழலில், இந்த வெற்றியைத் தொடர்ந்து நாடு திரும்பிய வீராங்கனைகள் லாகூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது போட்டியைப் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து வீராங்கனைகளின் உடைகளைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.


"நாம் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெண்கள் லெக்கின்ஸ் அணியாமல் ஏன் ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன்," என்று அணியின் மேலாளர் மற்றும் பிற அதிகாரிகளிடம் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.


இந்நிலையில், ”பல ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்திருக்கும் வீராங்கனைகளின் உடைகளில் கவனம் செலுத்துகிறீர்கள்” என அங்கேயே கேள்வி எழுப்பிய செய்தியாளரை சக செய்தியாளர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.


இந்தக் கேள்வியால் அதிர்ச்சியடைந்த தேசிய அணியின் பயிற்சியாளர் அடீல் ரிஸ்கி, நாம் இஸ்லாமிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், நம் பண்பாடு மிகவும் வலுவானது என்பதையும் புரிந்துகொள்கிறோம். ஆனால் விளையாட்டில் ஒருவர் முற்போக்கானவராக இருக்க வேண்டும்" என பதிலளித்தார்.


மேலும், "சீருடையைப் பொறுத்தவரையில் நாங்கள் யாரையும் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. நாங்கள் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.






இந்நிலையில், செய்தியாளர் எழுப்பிய இந்த சர்ச்சைக்குரிய கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.






இவரது இந்தப் பேச்சு மிகவும் பிற்போக்குத்தனமானது எனக் கடுமையாக விமர்சித்து விளையாட்டு வீரர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.