கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்கு அந்த மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து பெங்களூர் வந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.



கஞ்சாவுடன் கடத்திய பத்ரூதின்:


இதையடுத்து, பெங்களூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் 25 வயது இளைஞர் ஒருவரை கஞ்சாவுடன் பிடித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. பிடிபட்ட இளைஞரின் பெயர் பத்ரூதீன் என்று தெரியவந்துள்ளது. அவர் கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டம். இங்குள்ளது புட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது குடும்பத்தினர் கடும் பொருளாதார சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இவரது தங்கைக்கு விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். ஆனால், போதுமான அளவு பணம்  இல்லாமல் பத்ரூதீன் திண்டாடியுள்ளார். இதனால், பணத்திற்காக கஞ்சா விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் பத்ரூதீன்.


காரணம் என்ன?


இதற்காக ஒடிசாவிற்கு சென்று கஞ்சா வாங்கி வந்துள்ளார். கஞ்சா விற்பனை செய்து விரைவில் தனது தங்கை திருமணத்திற்காக பணம் சேர்க்கலாம் என்று கருதியுள்ளார். ஆனால், பெங்களூர் வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் பத்ரூதினை கைது செய்தனர்.  தங்கையின் திருமண செலவிற்காக அண்ணன் கஞ்சா கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,


கைது செய்யப்பட்ட பத்ரூதீனிடம் இருந்து கர்நாடக போலீசார் 5.2 கிலோ பறிமுதல் செய்தனர். மேலும், கர்நாடகவின் வித்யாரான்யபுராத்தில் 30 வயதான கென்யாவைச் சேர்ந்த பெண்ணிடம் 96 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.