45வது செஸ் ஒலிம்பியாட்:


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்ற நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் உள்ள புடபெஸ்டில் தொடங்கியுள்ளது.


இந்த 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் ரவுண்ட் இன்று(செப்டம்பர் 11) தொடங்குகிறது. அந்தவகையில் இந்த தொடர் செப்டம்பர் 23 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், புடாபெஸ்ட்டின் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் 193 அணிகளும், மகளிர் பிரிவில் 181 அணிகளும் போட்டியிடுகின்றன.


எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரக்ஞானந்தா - குகேஷ் :


இதில், இந்தியா சார்பில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, டி குகேஷ், விதித் குஜராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்கிறது. அதேபோல, மகளிர் பிரிவில், ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக வன்டிகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.


இந்த செஸ் ஒலிம்பியாட்டில், ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளில் 11 அணிகளை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் போர்டு 1, 2, 3, 4 என 4 போட்டிகள் நடக்கும். அந்த 4 போட்டிகளில் இரு அணிகள் பெரும் புள்ளிகளை வைத்து, அந்த சுற்றின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.11 சுற்றுகள் முடிவின் படி முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.அதேபோல், ஒவ்வொரு போர்டிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், இறுதியில், ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளும் சேர்த்து சிறப்பாக செயல்பட்ட அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.


இந்நிலையில், கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்ததால் இந்த முறையும் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.


போட்டியை எப்படி பார்க்கலாம்?


45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை "செஸ்பேஸ் இந்தியா"என்ற யூடியூப் பக்கத்தில் நேரடியாக கண்டுகளிக்கும் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்திய நேரப்படி எப்போது நடைபெறும்?


 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.