மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற வட மாநில தொழிலாளரை கத்தியால் குத்தி கொலை செய்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் பறிப்பில் நடந்த தகராறில் மற்றொரு தொழிலாளி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் 20க்கும் மேற்பட்ட வடமாநில கட்டிட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பீகார்  மாநிலம் சுபேல் மாவட்டத்தை  சுபாஷ்குமார் 18, பீகாரை சேர்ந்த சன்னி 21 இருவரும்  இரவு உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள கூத்தியார் குண்டு விலக்கில் உள்ள மளிகை கடையில்  பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர்.



 

எய்ம்ஸ் அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வடமாநில தொழிலாளிகள் இருவரையும் வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செல்போன் பறித்துச் சென்றவர்களை துரத்தி பிடித்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியதால்  மர்ம நபர்கள் திடீரென கத்தியை எடுத்து இருவரையும் இடது பக்க மார்பில் குத்திவிட்டு அவர்களிடமிருந்த செல்போனை பறித்துசென்றுள்ளனர். கத்திக்குத்து பட்ட வடமாநில தொழிலாளி சுபேஷ்குமார் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான சன்னி பலத்த  காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உடனடியாக  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் காயமடைந்த சன்னியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுனில்  மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 



 

தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் ஆதாயக் கொலை வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி, மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனர். சாலையோரம் நடந்து சென்ற வட மாநில தொழிலாளர்களின் செல்போனை பறித்துச் சென்ற போது நடந்த தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.