உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்கள் நீடித்த இந்த மீட்பு நடவடிக்கையின் வெற்றி அல்னால்ட் டிக்ஸ் இல்லாமல் முழுமையடையாது. சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்த நிபுணர்களில் அர்னால்ட் டிக்ஸ் முக்கிய பங்கு வகித்தார். அர்னால்ட் ஜெனீவாவின் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனம் நிலத்தடி கட்டுமானத்திற்கான சட்ட, சுற்றுசுழல், அரசியல் மற்றும் பிற அபாயங்களில் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
மீட்பு பணிக்கு பிறகு செய்தி நிறுவனமான ANI அவரிடம் பிரத்யேக பேட்டி ஒன்றை எடுத்தது. அப்போது பேசிய அவர், “சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். (விளையாட்டாக) நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, சுரங்கப்பாதை மீட்பு உட்பட மற்ற விஷயங்களையும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். தொழிலாளர்கள் 41 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எல்லாம் சரியாகிவிட்டது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இதுபோன்ற சேவை செய்வதில் எனக்கு பெருமை. நான் ஒரு பெற்றோர், என்னை போன்ற பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும், அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என்று நினைத்தேன். முன்னதாக, கூறியிருந்தேன், சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் மீட்கப்படுவார்கள் என்று. அதையே இப்போது செய்திருக்கிறோம். நாங்கள் ஒரு அற்புதமான குழுவாக பணியாற்றினோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர். இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நடந்ததற்கு நன்றி சொல்ல நான் கோயிலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் அனைவரும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அனைவரையும் உயிருடன் மீட்டு, மிகப்பெரிய அதிசயத்தை கண்டோம்” என்று தெரிவித்தார்.
யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்..?
அர்னால்ட் டிக்ஸ் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின் (ஜெனீவா) தலைவராக உள்ளார். அவர் புவியியலாளர், பொறியாளர் மற்றும் வழக்கறிஞர் போன்ற பிற பட்டங்களையும் பெற்றுள்ளார். அர்னால்ட் டிக்ஸ் மெல்போர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சட்டப் பட்டம் பெற்றுள்ளார். அவரது இணையதளத்தில் உள்ள தகவல்களில், அர்னால்ட் டிக்ஸ் ஒரு திறமையான வழக்கறிஞர் என்றும் கூறப்படுகிறது. நவம்பர் 20 அன்று இந்த சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அர்னால்ட் டிக்ஸ் களமிறங்கினார்.