முன்விரோத கொலைகள்
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் மண்டலத் தலைவரான வி.கே.குருசாமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் மண்டலத்தலைவர் ராஜபாண்டி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவருகிறது. இதில் இருதரப்பிலும் நடந்துவரும் பழிக்குப் பழி மோதலில் ராஜபாண்டியின் மகன், வி.கே.குருசாமியின் மருமகன் உள்பட இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இரு தரப்பினரும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் வைத்து வீ.கே.குருசாமியை சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்து பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
சோதனையில் பெரிய வாள்
இந்நிலையில் கீரைத்துறை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மதுரை வாழைத் தோப்பு பட்டறை சந்து எதிரேயுள்ள மைதானத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் நின்ற மதுரை காமராஜபுரம் குமரன் குறுக்குதெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டுமணியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தபோது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை சோதனை செய்தபோது பெரிய வாள் ஒன்றை உடலில் மறைத்துவைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக மணிகண்டனை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் பல குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியாக வி.கே குருசாமியின் தரப்பினரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆயுதம் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தியபோது வீ.கே.குருசாமி தரப்பினரான தங்களுக்கும் எதிர் தரப்பினரான ராஜபாண்டி தரப்பினருக்கும் முன் பகை அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுவதாகவும் எனவே, தற்போது வி.கே குருசாமி வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துவரும் போது தங்களுடைய எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் அவரை தாக்குவதற்காக வந்தால் அவர்களை தாக்கி கொலை செய்ய வேண்டும். என்று, நீண்ட வாளுடன் இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காவல்துறையினர் அதிர்ச்சி
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மணிகண்டன் என்ற மாட்டு மணியிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து அவர் மீது கொலை செய்யும் நோக்கோடு ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். வீ.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினர் இடையே மோதல் அதிகரித்துவரும் நிலையில் வி.கே.குருசாமி வீட்டின் அருகே வாளுடன் சுற்றிதிரிந்த மணிகண்டன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர்களுக்கு ஷாக்.! விடுவித்தது செல்லாது! நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு! இதுதான் தேதி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Colourful Cities In The World: ”வாவ்” கலர்ஃபுல்லான இடங்களை சுற்றி பார்க்கனுமா? - உலகின் சிறந்த 8 இடங்கள் இதுதான்..!