சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 


கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது. மறைந்த கருணாநிதி அப்போது முதலமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனும் இருந்தனர். 


இதையடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும் அவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. 


அதேபோல் கே.கே.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் மீதும் அவரது மனைவி ஆதிலட்சுமி மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. 


இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாவிட்டாலும் அமைச்சர்கள் இருவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார். இதையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து விசாரணையை தொடங்கினார். 


விசாரணையின்போது அமைச்சர்கள் இருவரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் ஆதாரங்களை புறந்தள்ளிவிட்டு விசாரணையை நடத்துவது எப்படி நியாயம் எனவும் வாதிடப்பட்டது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் முதலில் விசாரித்த விசாரணை அதிகாரி ஆவணங்களை கவனிக்க தவறிவிட்டார் எனவும் பின்னர் வந்தவர் ஆவணங்கள் சரியாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 


இந்த நிலையில் தான் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை தள்ளிவைத்தார். இப்போது இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசுவை ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை  ஆகஸ்ட் 11ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.