மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. மதுரை மாநகராட்சியின் தி.மு.க., முன்னாள் மண்டலத் தலைவராக பதவி வகித்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் மண்டலத்தலைவர் ராஜபாண்டி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதில் இருதரப்பிலும் நடந்து வரும் பழிக்குப் பழி மோதலில் ராஜபாண்டியின் மகன்,  வி.கே.குருசாமியின் மருமகன் உள்பட இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினருடன் நடந்த மோதலில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு தரப்பினரையும் காவல்துறையினரையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 



 

இந்நிலையில் வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த வி.கே.குருசாமியை அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோன்று கொலை வழக்கில் வீகே குருசாமியின் மகன் மணியும் கைது செய்யப்பட்டு இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குருசாமியின் உறவினர் ஒருவரின் மறைவிற்கு பரோலில் வந்தபோது குருசாமி மற்றும் அவரது மகன் மணியை பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்ய முயன்றனர்.

 

இதனையடுத்து பரோல் முடிவடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசாமி வீட்டில் இருந்தபோது அவரை இளைஞர்கள் சிலர் கொலை செய்வதற்கு முயற்சித்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதன்காரணமாக குருசாமி மற்றும் அவரது மகன் மணியை பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒரு தரப்பினர் தேடிவருவதால் இருவரும் கர்நாடக மாநிலத்தில் வீடு எடுத்து தனி தனியாக தங்கி வந்துள்ளனர்.

 




 

இந்நிலையில், கே.குருசாமி கர்நாடக மாநிலம் பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாநகர் கீரைத்துறை, காமராஜர்புரம், வில்லாபுரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரங்களில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள கர்நாடக மாநில காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக மதுரை நோக்கி விரைந்துள்ளனர். மதுரையில் முன்னாள் தி.மு.க., மண்டலத் தலைவர் மீது  பழிக்குப் பழி வாங்கும் விதமாக கர்நாடகாவில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.