பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய கொலைகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் அரிவாளால் நேற்று முன்தினம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த தவிடு, புண்ணாக்கு வியாபாரம் செய்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டின் அருகேயுள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தியதை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை சரமாரியாக வெட்டியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சித்தப்பா மகன் மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் அவரின் அக்கா ரத்தினாம்பாள் ஆகிய 3 பேரையும் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் நேற்று முன்தினம் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இன்றைய தினம் (செப்டம்பர் 6) இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையா ஆகிய இருவரும் காவல் நிலையத்துல் சரணடைந்துள்ளனர்.