மதுரை மாநகர் தெற்குவாசல் அருகே மறவர்சாவடி பகுதியில் உள்ள கடை ஒன்றில், விலை உயர்ந்த வாசனை திரவயங்கள் மற்றும் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படும் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தினை பதுக்கிவைத்திருப்பதாக வனஉயிர் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடையில் சோதனையிட்டபோது அங்கு பதுக்கிவைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோவிற்கும் அதிகமான திமிங்கல எச்சத்தினை பறிமுதல் செய்தனர். 






இதனையடுத்து திமிங்கல எச்சத்தை பதுக்கிவைத்திருந்த மதுரை மஞ்சணகார தெரு பகுதியை சேர்ந்த ராஜாராம் (36),  வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூரை சேர்ந்த கவி (48) ஆகிய 3 பேரை  கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த திமிங்கல எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.




 

கடலில்  அலைகளால் கரைத்து அடித்து வரும்போது திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே சுரக்கும் அம்பர்கிரிஸ் எனும் திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது. இதனை நெருப்பினால் சூடு காட்டினால் மணம் கமழும் வாசனை வெளிவரும் கடலில் உள்ள திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் இந்த  திரவமானது வாசனை திரவியம் மற்றும் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தனித்துவம் மிக்கதாக இருக்கும் இந்த அம்பர்கிரிஸ் எனும் திமிங்கல எச்சம் கிலோ ஒன்று பல கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.அம்பர்கிரிஸ் எனும் திமிங்கல எச்சம் வைத்திருப்பது குற்றமாகும். இதனை சட்ட விரோதமாக வைத்திருக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளர்.