சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது புழுதிப்பட்டி கிராமம். கடைக்கோடி கிராமத்தில் கறிக்கடை நடத்தி, தன் மகன்களை படிக்க வைத்தும், மனைவியுடன் ஒத்துழைப்போடு வாழ்ந்து வருகிறார் மாற்றுத்திறனாளி ஜாகிர் உசேன்.




நல்ல பார்வைகொண்ட நாமே சில நேரம் காய்கறி நறுக்கும் போது கூட கைகளையும் லேசா நறுக்குவது உண்டு. ஆனால் கூர்மனையான கறிக்கடை கத்தியை பார்வை இல்லாத போதும் லாவகமாக பயன்படுத்துகிறார் ஜாகிர் உசேன். பிரியாணிக்கா, கிரேவிக்கா என கேட்டு, கேட்டு சிக்கனை வெட்டித் தள்ளுகிறார். பணத்தை சைஸ் வாரியாக கண்டுபிடித்து கல்லாப்பெட்டியில் போடுகிறார். தரமான கறி என்பதால் விலையில் சமரசம் இல்லை. புளியங்கட்டையில் கறியை வெட்டி முடித்த கையோடு நம்மிடம் பேசத்தொடங்கினார் ஜாகிர் உசேன்.


 





 

" எனக்கு சின்ன வயசில இருந்தே கண்கோளாறு இருந்துள்ளது. இதை புருஞ்சுக்கிட்ட எங்க அப்பா, அம்மா மதுர அரவிந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிருக்காங்க. ஆனாலும் எனக்கு கண்பிரச்னையை சரிசெய்யமுடியாத அளவிற்கு இருந்துருக்கு. அதற்கான சாத்தியமும் இல்லாததால அப்டியே விட்டுட்டாங்க. இருந்தாலும் லேசுவாசா தெரிஞ்ச கண்ண வச்சு பள்ளிக்கூடம் படிச்சேன். 7 வது வரைக்கும் ஜன்னலோர வெளிச்சத்தில் படிச்சேன். ஆனால் போகப்போக கண்பார்வை முழுமையா கைவிட்ருச்சு.



வாக்கிங் ஸ்டிக்க வச்சு தான் வாழ்க்க ஓடுச்சு. எனக்கு சொந்த ஊர் ராம்நாடு பக்கத்துல ராதாபுலி. புலிபெயர் கொண்ட ஊரில் பிறந்த நாம பூனையா கிடக்கனுமானு கிடைச்ச வேலைய செய்ய ஆரம்பித்தேன். முழு பார்வையையும் இழந்த நான், அப்பாவோட நண்பர் மூலமாக புழுதிப்பட்டிக்கு வந்துட்டோம். அப்படியே கறிக்கடையில் வேலை செஞ்சு சொந்தமா கறிக்கடையும் நடத்தினேன். ஆனாலும் நஷ்டம் என்னை துரத்தியது. தொடர்ந்து ஏமாற்றம், கஷ்டம் துரத்துனாலும் தன்னம்பிக்கைய கைவிடாம தொழில் செஞ்சேன். திருமணமாகி இரண்டு பசங்களும் இருக்காங்க. புழுதிப்பட்டியில் கறிக்கடை நடத்தி என் மகன்கள படிக்க வைக்கிறேன்.



மூத்தவன் எஞ்னியரிங் படிக்கிறான். எளையவன் ஸ்கூல் தான் போய்டு இருக்கான். லீவு நாட்களில் என் மகன்களும் நண்பர்களும் கறிக்கடையில் உதவி செய்வாங்க மித்த நாட்களில் நான் மட்டும் தான் கடையில் வேலை செய்வேன். எனக்கு கறிக்கடை தொழில் பழகிப்போனதால எல்லா நேக்கு, போக்கும் அத்துபடி. கோழி ரகத்தை கூட கையில் பிடிச்சே சொல்லிருவேன். தரமான கோழிகள எளிமையா தேர்வு செஞ்சுருவேன். என் குடும்பத்த கவனித்துக்க தொழில் போதுமான வருமானத்தை கொடுக்குது. ஆனால் என் மகன்களை படிக்க வைப்பதில் தான் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அரசு உதவி செய்தால் இந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் ஒளி பிறக்கும்" என்றார் நெகிழ்ச்சியாக.