திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த படிஅக்ரகாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 175 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் இரும்பு சத்து மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, காலையில் 11 மணிக்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 68 மாணவ, மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை (சிங்க் மாத்திரை) தலைமை ஆசிரியர் லலிதா தலைமையில் மருத்துவக் குழுவினர் வழங்கியுள்ளனர். பின்னர் மாணவர்களுக்கு பள்ளியில் மதிய உணவாக சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டுள்ளது. அப்போது 10 மாணவர்களுக்கு லேசான தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளியிலே படுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அந்த மாணவர்களை காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட 24 மாணவிகள் என 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைத்து மாணவ ,மாணவிகளையும் காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு எவ்வாறு உடல் உபாதைகள் ஏற்பட்டது என மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். அப்போது இந்த சம்பவம் குறித்து அறிந்த சுகாதார பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் தனது தலைமையில் மருத்துவக் குழுவினரோடு அந்த பள்ளிக்கு விரைந்து சென்றனர். அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அரசு அதிகாரிகள் ஆகியோர் காரப்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், இரும்புச்சத்து மாத்திரையால் பிரச்னையில்லை, கிராமத்தில் பள்ளிக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை பரிசோதனை செய்யவும், இரண்டு நாட்களுக்கு இரவு பகல் பாராமல் இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் என நான்கு நபர்கள் கிராமத்திலேயே தங்கி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.