மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது பீடல் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள முல்தாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காந்திவார்டு என்ற இடம் உள்ளது. இங்குள்ள நாகா சாலையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவர் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்ட காயம் இருந்தது.


சடலமாக கிடந்த இளம்பெண்:


போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதியானதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். போலீசார் அவரது சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.


அப்போது, உயிரிழந்த இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது அவர் தாக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் சிம்ரன் ஷேக் என்றும், அவருக்கு வயது 26 என்றும் தெரியவந்தது. போலீசார் அவரது சடலத்துடன் அங்கே இருந்த அவரது செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அவரது செல்போனில் சில ஆடியோக்களும், சில வீடியோக்களும் இருந்தன. அந்த வீடியோக்களில் அந்த பெண் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது.


அதிர்ச்சி பின்னணி:


பின்னர், போலீசார் அந்த வீடியோவில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சானிஃப் மாலிக். மாலிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தது. மாலிக்கிற்கும், சிம்ரனுக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நண்பர்களாக பழகி வந்த இருவரும் பின்னர் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். இந்த சந்திப்பிற்கு பின்பு இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளனர். இதை சிம்ரன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்துள்ளார்.


இந்த நிலையில், மாலிக்கிற்கு அவரது வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த சிம்ரன் மாலிக்கிடம் இந்த வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். மேலும், இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.


பணம் கேட்டு மிரட்டல்:


கடந்த புதன்கிழமை மாலிக்கிடம் சிம்ரன் ரூபாய் 5 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். சிம்ரன் தொடர்ந்து தன்னை மிரட்டியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாலிக், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு ஸ்கூட்டரில் தனியாக வந்து கொண்டிருந்த சிம்ரனை தாக்கியதுடன், அவரை கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். தற்போது, மாலிக்கை போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி ஃபேஸ்புக் தோழி மிரட்டியதால் இளைஞர் அந்த பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Villupuram: ஆரோவில் அருகே மதுபோதையில் எஸ்பி காரை மறித்து ரகளை செய்த வாலிபர் கைது


மேலும் படிக்க: Crime: பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய கடப்பாறை திருடர்கள் - போலீசில் சிக்கிய பின்னணி