விழுப்புரம் : ஆரோவில் அருகே மது போதையில் காவல் கண்காணிப்பாளர் காரை மறித்து ரகளை ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுச்சேரி -திண்டிவனம் பைபாஸ் சாலை பட்டானூர் மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த வாலிபர் போலீசை கண்டதும் திடீரென அவர் ஒட்டி வந்த பைக்கை மீண்டும் புதுச்சேரி நோக்கி திருப்பும் பொழுது அங்கு நின்று கொண்டிருந்த காவலர் தண்டபாணி மீது மோதியது. அந்த வாலிபரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மது போதையில் இருந்துள்ளார்.
அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்ட பொழுது போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அந்த வாலிபர் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு சாலையில் வந்த வாகனங்களை மறித்துள்ளார். இதனை காவலர் தங்கமணி வீடியோ எடுக்க முற்பட்டபோது அவரது செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்துள்ளார். அப்போது போலீஸாருக்கு உதவியாக வந்த கலால் துறை காவலர் காமராஜ் என்பவரை இந்த வாலிபர் சட்டையை கிழித்து அடித்துள்ளார்.
அந்த நேரத்தில் திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வந்த வாகனத்தை இந்த வாலிபர் மறித்து ரகளையில் ஈடுபட்டார். வாகனத்தில் இருந்து இறங்கி வந்த எஸ்.பி ராஜாராமை பார்த்த ஆரோவில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் புதுவை சண்முகபுரம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கண்ணன் வயது 30, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வந்த இளைஞர் தகராறு செய்து போலீசை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்