நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இது அனைவரையும் வேதனையடைய வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்னா மாவட்டம்.
இயற்கை உபாதைக்கு சென்ற சிறுமி:
சாட்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பெண் உள்பட அந்த கிராம பெண்கள் பலரும் மறைவான காட்டுப்பகுதியை இயற்கை உபாதைக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த 17 வயது சிறுமி இயற்கை உபாதைக்காக அந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த விஜய் சேகத்( வயது 19) என்ற இளைஞன் அந்த சிறுமிக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்துள்ளான். பின்னர், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
மிரட்டி பாலியல் வன்கொடுமை:
இதனால், அந்த சிறுமி பயத்திலே அன்று இரவு யாரிடமும் இந்த தகவலை கூறாமல் இருந்துள்ளார். ஆனால், சிறுமியின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் இதுகுறித்து சிறுமியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த கொடூர செயலை செய்த விஜய் சேகத்தை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கடந்த நான்கு நாட்களில் மட்டும் சாட்னா மாவட்டத்தில் நடக்கும் 2வது பாலியல் வன்கொடுமை சம்பவம் இதுவாகும்.
நான்கு நாட்களில் 2வது சம்பவம்:
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இதே சாட்னா மாவட்டத்தில் உள்ள மைஹிர் நகரத்தின் அருகே 12 வயது சிறுமியை இரண்டு பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்திய பரபரப்பும், சோகமும் அரங்கேறுவதற்குள் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகள் உள்பட எவருக்கு எதிரான பாலியல் குற்றங்களும் மிகவும் கொடூரமான செயல் ஆகும். யாரேனும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் உடனடியாக பெற்றோர்களிடமும், காவல்துறையினரிடமும் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Delhi Crime: 4 ஆண்டுகள் காதல் தொல்லை.. பெண்ணை பின்தொடர்ந்த கொலையாளி.. டெல்லி கொலை வழக்கில் பகீர் தகவல்...!
மேலும் படிக்க: Delhi Crime: 4 ஆண்டுகள் காதல் தொல்லை.. பெண்ணை பின்தொடர்ந்த கொலையாளி.. டெல்லி கொலை வழக்கில் பகீர் தகவல்...!