பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. 


ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.


கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி:


சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் மனதை உலுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 11 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.


மைஹார் நகரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாரதா கோயில் அருகே உள்ள காட்டில், சிறுமியின் உடல் ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. அவர் தற்போது, ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


பசுகாப்பக பணியாளர்:


இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கோவில் நிர்வாகக் குழுவால் நடத்தப்படும் பசுக்கள் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் காவல்துறைக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.


நடந்தது என்ன?


சம்பவம் எப்படி நடந்தது என்பதை விவரித்த காவல்துறை அதிகாரி, "நேற்று மாலை சிறுமி காணாமல் போயுள்ளார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்து, அவரை தேடத் தொடங்கினர். 


இன்று காலை சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆர்கண்டி டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். மைஹார் நகரத்தில் உள்ள சாரதா தேவியின் கோயிலுக்கு அருகில் இந்த காடு உள்ளது.


குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்து, சிறுமியை மைஹார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்த செய்தி கிராமம் முழுவதும் தீ போல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மருத்துவமனைக்கு சென்றனர். போலீசாரும், மாவட்ட அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று நிலைமையை கைமீறிப் போகவிடாமல் தடுத்தனர்.


இதுகுறித்து மத்திய பிரதேச முதலமைச்சர், தனது ட்விட்டர் பக்கத்தில், "மைஹாரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. என் இதயம் வலியால் நிரம்பியுள்ளது. நான் வேதனைப்படுகிறேன். குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.


மத்திய பிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் அந்த மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.