திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் லாரி கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் சேகர், குற்றப்பிரிவு தலைமை காவலர் நாசர், காவலர்கள் கார்த்திக், அறிவுச்செல்வம், ரகுராம் ஆகியோரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


லாரி கடத்தல் வழக்கு:


ஒசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த முரளி என்பவரின் லாரி கடத்தப்பட்ட வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் இருந்து வாகன உதிர் பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாட்றம்பள்ளி அருகே லாரி வந்து கொண்டிருந்த போது வெலக்கல்நத்தம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் லாரியை வழிமறித்து கடத்தி சென்றது. 


இதுகுறித்து லாரி உரிமையாளர் முரளி கொடுத்த புகாரின்பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரன் என்பவரை கைது செய்தனர். லாரியை உடைத்து விற்று விட்டதால் அதற்கு பதில் ரூ. 12 லட்சம் தருவதாக ராஜசேகரன் ஒப்புக்கொண்டார். முதல் தவணையாக ராஜசேகரன் கொடுத்த ரூ. 7 லட்சத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்காமல் காவல் நிலையத்திலேயே வைத்திருந்துள்ளனர். எஞ்சிய பணத்தை கேட்டு போலீசார் வற்புறுத்தியதால் ராஜசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். 


6 பேர் பணிநீக்கம்:


புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல்நிலையத்தில் சோதனை செய்தனர். அதில் அங்கு இருந்த ரூ.7லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போதைய நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் காமராஜ், எஸ்.ஐ ஆகியோர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். லாரி கடத்தல் வழக்கு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் அதிரடியாக 6 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். லாரி கடத்தல் வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணிநிக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள்.. இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!


மேலும் படிக்க: 12 Hours Work: 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்து கிளம்பிய எதிர்ப்பு..தொழிலாளர் சங்கத்தில் போராட்டம் அறிவிப்பு!