ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி ரன்கள் 49 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல தங்களை கொண்டு செல்ல முதல் சுற்று போட்டிகளில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்டு விளையாடி வருகிறது. இதனால் நடப்பு தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. அந்த வகையில் இன்றைய ஆட்டமும் அமைந்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 33 லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களான டேவன் கான்வே, ருத்ராஜ் கெய்க்வாட் இருவரும் பேட்டிங் செய்ய வந்தனர்.
மாஸ் காட்டிய சென்னை அணி
இருவரும் முதலில் நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் ஆட பவர்ப்ளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. பின்னர் அணியின் ஸ்கோர் 71 ரன்களாக உயர்ந்த போது ருத்ராஜ் 35 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து களம் கண்ட ரஹானே தொடக்க முதலே அதிரடி ஆட்டம் ஆடினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய டேவன் கான்வே 56 ரன்களில் அவுட்டாக ஷிவம் துபே உள்ளே வந்தார்.
ரஹானே - துபே ஜோடி கொல்கத்தா பந்து வீச்சை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்க விட்டு சென்னை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் திணறி போயினர். 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களில் துபே அவுட்டானார்.
மறுபுறம் சூறாவளியாக சுழன்ற ரஹானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை விளாசினார். இறுதிக்கட்டத்தில் ஜடேஜா 18, தோனி 2 ரன்கள் விளாச சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. இதுவே இந்த தொடரில் எடுக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்னாகும்.
சரணடைந்த கொல்கத்தா
இதனைத் தொடர்ந்து கடின இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் விக்கெட்டுகளை இழக்காமல் ரன் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சு கொல்கத்தா அணி வீரர்களை எண்ணத்தை சிதறடித்து விட்டது. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜேசன் ராய் மட்டும் சிறப்பாக 26 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
மறுபக்கம் ரிங்கு சிங் (53 ரன்கள் ) போராடினாலும் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆகாஷ் சிங், மொயீன் அலி, ஜடேஜா, மதீஷா பதிரனா அகியோர் தலா ஒரு விக்கெட்டையும், தேஷ்பாண்டே, தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.