கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனுமதி கோரி மாவட்ட காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் முன்னாள் அதிமுக தலைவர்  ஜெயலலிதாவிற்கு சொந்தமானது. அவருக்கும் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரிய சசிகலாவுக்கும் சொந்தமானது. இந்த எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று, பின்னர் சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச்சென்றது.


இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் மற்றும் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் காவல்துறை திடீரென மேலும் விசாரணைக்கு செல்ல முடிவு செய்துள்ளது.


‘புதிய சான்றுகளின் அடிப்படையில்’ ஜெயலலிதா இறந்த சில மாதங்களுக்கு பிறகு கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சிஆர்பிசி பிரிவு 173 இன் கீழ் ஒரு வழக்கை மேலும் விசாரிக்க விதிகள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.




இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயனுக்கு கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அந்த குற்றத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் பேட்டியில் கூறினா. அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.


இந்த கொள்ளையை ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் மற்றும் சயன் திட்டமிட்டதாக போலீசார் கூறினர். கனகராஜ் ஏப்ரல் 2017 இல் ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் சயானும் கேரளாவின் பாலக்காட்டில் ஒரே நாளில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.


இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்…..  Game Over Bro' எனப் பதிவிட்டிருந்தார். கடந்த ஜூலை 20ஆம் தேதி அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.


அஸ்பையர் சுவாமிநாதனின் இந்த ’மர்ம’ ட்வீட்கள் குறித்து அவரிடமே கேட்டோம், ‘நம்பகத்தன்மை வாய்ந்த நபர் ஆதாரங்களைப் பற்றியும் கொலைக்குக் காரணமானவர்கள் பேசினது பற்றியும் சொன்னாங்க. கேட்கவே ரொம்ப ஷாக்கிங்காவும் பயமாகவும் இருந்தது’ எனக் கூறினார். 


இந்த நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் விசாரிக்க  முடிவு செய்துள்ள போலீசார், கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஊட்டி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இதன்பிறகாவது கொடநாடு பங்களா கொலைகளின் மர்ம முடிச்சுகள் குறித்து வெளிவருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ABP நாடு Exclusive: ‛எவிடென்ஸெல்லாம் ரொம்ப ஷாக்கா பயமா இருக்கு!’ - கோடநாடு கொலை குறித்து அஸ்பையர் சுவாமிநாதன்!