பெட்ரோல் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என மக்கள் நம்பிக்கை இழந்திருந்த நிலையில் நேற்றைய தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி மூன்று ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது மக்களுக்குப் பெரிய ஆசுவாசமாக அமைந்தது. இதன் எதிரொலியாக நிதித்துறை செயலர் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறையும் என்றும் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
நள்ளிரவில் குறைந்ததா? பெட்ரோல் பங்க்குகளுக்கு ஸ்பாட் விசிட் செய்தோம். நிதித்துறை செயலர் பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் குறையும் என அறிவித்தாலும் பெட்ரோல் போடும் பங்க்குகளில் விலைப்பலகையில் நள்ளிரவில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. நள்ளிரவில் இருந்து இன்று காலை 6:30 மணி வரையில் ஸ்பாட் விசிட் செய்த பங்க்குகளில் ஒன்றில் மட்டுமே விலைப்பலகையில்மட்டுமே குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றபடி பெரும்பாலானா பெட்ரோல் பங்குகளில் குறைக்கப்படாத பழைய பெட்ரோல் விலையே, அதாவது கூடுதல் விலை பெட்ரோலே விற்கப்பட்டது.
பார்த்த வரைக்கும் ஒரே ஒரு பெட்ரோல் பங்கில் மட்டும் விலை குறைக்கப்பட்டிருந்தது. அங்கு மட்டுமே குறைக்கப்பட்ட விலைப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்ட அறிவிப்பின் படி பெட்ரோல் விலையின்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.99.51 டீசல் லிட்டருக்கு ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பங்குகளில் நேற்றைய விலையான ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49க்கு விற்கப்படுகிறது. 27 நாட்களாக பெட்ரோல் விலை குறையாமல் 100 ரூபாய்க்கு மேலாக விற்று வந்த நிலையில் இன்று குறைந்தது.மற்றபடி டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசு தனது அடுத்த ஆறு மாதகாலத்துக்கான பட்ஜெட் அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பி.டி.ஆர்., சட்டமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அம்சமாக பெட்ரோலின் மீதான மாநில வரி மூன்று ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்:
இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் தற்போது வரை பெட்ரோல் நுகர்வு விலையில் 40 சதவீத உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த காலகட்டங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 27 சதவீத விலை சரிந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்தது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்திருந்தார். தற்போதைய அறிவிப்பில் கூட பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தால் மாநிலத்துக்கு ரூ.1200 கோடி வரை இழப்பீடு என அவர் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.