Crime: கர்நாடகாவில் தேர்வு எழுதச்சென்ற மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில்  பெண்களுக்கு எதிராக நடக்கும்  குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது நின்ற பாடிலில்லை. இந்த நிலையில், கர்நாடகாவில் கல்லூரி மாணவிகளுக்கு ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


மாணவிகள் மீது ஆசிட் வீச்சு:


அதாவது, கர்நாடக மாநிலத்தில் தற்போது பியுசி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அப்போது, கன்னடா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வந்துக் கொண்டிருந்தனர்.  அப்போது, பள்ளிகளுக்கு வெளியில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்து கொண்டு இளைஞர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார்.


அந்த நேரத்தில், தேர்வுக்காக காத்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது அந்த இளைஞர் ஆசிட் வீசியுள்ளார். இந்ந ஆசிட் அங்கிருந்த இரண்டு மாணவிகள் மீது பட்டது. மாணவிகள் மீது ஆசிட்  வீசிவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது, அங்கிருந்தவர்களை அவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


ஆசிட் வீச்சால் படுகாயம் அடைந்த மாணவிகளை  அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர். மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் கேரளாவைச் சேர்ந்த அபின் (23) என்பவர் தெரிய வந்துள்ளது. 


காரணம் என்ன?


இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதல் விவாகரத்தால் மாணவி மீது ஆசிட் வீசியதாக  அபின் வாக்குமூலம் அளித்தாக சொல்லப்படுகிறது. அதாவது, காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.  இருப்பினும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் அபின் மாணவிகள் மீது ஆசிட் வீசியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். அபின் எம்பிஏ படித்து வருகிறார். காதல் விவகாரத்தால் ஆசிட் வீசியதாக விசாரணையில் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூன்று மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தீக்காயங்கள் அதிகாமாக இருப்பதால், வேறுறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாணவிகள் மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றனர். தேர்வு எழுத சென்ற மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.