டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில், “புதிய புரட்சிகரமான திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா'. இந்த திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கப்படும்” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக இதுபோன்ற திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்ற பெயரில் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்கப்படுகின்றது.
டெல்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவால் அரசின் 10வது பட்ஜெட்டை டெல்லி நிதியமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார் . அதிஷி கூறுகையில், "இன்று நான் கெஜ்ரிவால் அரசின் 10வது பட்ஜெட்டை தாக்கல் செய்வது மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசவேண்டியது எனது கடமை”.
ராம ராஜ்ஜியம்
”நாங்கள் அனைவரும் ராமரால் ஈர்க்கப்பட்டவர்கள். கடந்த 9 ஆண்டுகளாக இந்த 'ராம ராஜ்ஜியம்' கனவை நிறைவேற்ற இரவு பகலாக முயற்சித்து வருகிறோம். மக்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்க முயற்சித்தோம். கடந்த 9 ஆண்டுகளில் டெல்லி. டெல்லியில் ராமராஜ்ஜியத்தை நிறுவ நிறைய செய்ய வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் அதிக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது”.
” 2014ல், டில்லியின் ஜி.எஸ்.டி.பி., ரூ.4.95 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில், டில்லியின் ஜி.எஸ்.டி.பி, இரண்டரை மடங்கு அதிகரித்து, ரூ.11.08 லட்சம் கோடியாக உள்ளது. 2014ல், டெல்லியின் தனிநபர் வருமானம் ரூ.2.47 லட்சமாக இருந்தது, இன்று டெல்லியின் தனிநபர் வருமானம் 4.62 லட்சத்தை எட்டியுள்ளது, இது தேசிய சராசரியை விட இரண்டரை மடங்கு அதிகம். இன்று ரூ.76,000 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளேன்” என்றார்.
விமர்சிக்கப்பட்ட மத்திய அரசு
மேலும், ”இந்த 76,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மத்திய வரியில் ஒரு பைசா கூட பங்கு பெறப் போவதில்லை. பணக்கார குடும்பத்தின் குழந்தை பணக்காரனாகவும், ஏழைக் குடும்பத்தின் குழந்தை ஏழையாகவே இருந்துவந்தது. இது ராம ராஜ்ஜியக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது. அதை மாற்றியது கெஜ்ரிவால் அரசு, இன்று தொழிலாளர்களின் குழந்தைகள் நிர்வாக இயக்குநர்களாகியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 2,121 மாணவர்கள் JEE மற்றும் NEET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்விக்கு நமது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 2015ல் கல்விக்கான பட்ஜெட்டை இரட்டிப்பாக்கினோம். மொத்தம் பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு கல்விக்காக மட்டுமே செலவிடுகிறோம். இந்த ஆண்டுக்கு ரூ.16,396 கோடி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.