கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினர் ரூ. 12 கோடி மதிப்புள்ள 1, 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து எம்பிஏ பட்டதாரி உள்பட 3 பேரை கைது செய்தனர். 


முன்னதாக, பெங்களூர் சாமராஜ் பேட்டையில் ஒருவர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஆந்திராவிம் விசாகப்பட்டினத்தில் மூன்று வாரங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் பல மாநிலங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 


காவல்துறையினர் அளித்த தகவலின்படி, பெங்களூரில் கஞ்சா விற்பனை செய்தபோது சல்மான் என்பவர் கைது செய்யப்பட்டார். இன்று கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் ராஜஸ்தானை சேர்ந்த சந்திரபான் பிஷ்னோய் மற்றும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி மோகன் தான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சந்திரபான் எம்பிஏ பட்டதாரியும், லட்சுமி பிஏ பட்டதாரியும் ஆவார்கள். 


மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்த் கூறுகையில், “ மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நபர்களை பிடித்துள்ளோம். சாமராஜ்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷனில் சல்மானிடன் விசாரணை நடத்துள்ளது. அதன்பிறகு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு போலீஸ் குழு சென்று மூன்று வாரங்களாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இறுதியாக போலீசார் முக்கிய குற்றவாளியான சந்திரபான் மற்றும் அவரது கூட்டாளியான லட்சுமி மோகன் தாஸ் ஆகியோரை கைது செய்தது. 


கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ராஜஸ்தானின் பதிவு எண் கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கஞ்சாவை எடுத்து செல்வதற்காக வானகத்திற்குள் மறைவான பெட்டிகளை அமைத்துள்ளனர். போக்குவரத்தின்போது ஃபிலிப் கார்ட்டின் பார்சல் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்து பல போலி இலக்க தகடுகள் எடுக்கப்பட்டது “ என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், “பெங்களூருவுக்கு வருகின்ற கஞ்சாவின் பின்னணியில் இந்த குற்றவாளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக கர்நாடக காவல்துறையால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் இது. போதைக்கு எதிரான நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும்” என்றார். 


குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது சாமராஜ்பேட்டை காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, என்டிபிஎஸ் சட்டம் 20 (பி) (2) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.