கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தின் தலைமைப் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சாமியார், ஹாவேரியில் உள்ள பங்கபுரா அருகே கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் உண்மை வெளிவரும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், தலைமை மடாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு தொடர்பாக வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இது ஒரு முக்கியமான வழக்கு. போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்ரதுர்காவில் ஒரு கடத்தல் வழக்கு உள்ளது. போலீசார் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், கருத்துகளை கூறுவது அல்லது வழக்கை விளக்குவது விசாரணைக்கு நல்லதல்ல.
உயர்நிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டு போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மைசூரு நகர போலீஸார் தலைமை மடாதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலரின் புகாரின் அடிப்படையில் மடத்தின் விடுதி வார்டன் உட்பட 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மைசூருவைச் சேர்ந்த 'ஓடனாடி சேவா சம்ஸ்தே' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகி, கவுன்சிலிங்கின் போது தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமிகள் விவரித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாரிகளை அணுகி, காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் மடத்தின் நிர்வாக அதிகாரியும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.பசவராஜன் இருப்பதாக முருகா மடத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்.பி.விஸ்வநாத் குற்றம் சாட்டியிருந்தார். சித்ரதுர்காவில் பசவராஜன் மீது மடத்தின் ஊழியர் என்று கூறப்படும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.