புதுக்கோட்டை அருகே நச்சாந்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் சுகன்யா (வயது 30). இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்கள், உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது வழக்கம். மேலும் சிறப்பு முகாம் நடத்தினால் அதற்கு பணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், நச்சாந்துப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருபவர் மனோஜ். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி காசோலை மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குரிய வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909-ஐ மோசடி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்ட சுகன்யாவை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சுகன்யா மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், காசோலையில் மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அவ்வப்போது கடந்த சில மாதங்களாக பணம் எடுத்து வந்துள்ளார். மேலும் தனது வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை நடைபெற்ற போது மேற்கண்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் என்றனர். புதுக்கோட்டையில் வட்டார மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி செய்த சுகாதாரத்துறை பெண் ஊழியர் கைதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனங்கள், வங்கியில் மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி, முதலீடு செய்தால் இரண்டு, மூன்று மடங்கு லாபம் என கூறி மக்களிடம் பணம் மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது. இவற்றை முற்றிலுமாக தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் இது போன்று ஆசைவார்த்தை கூறுபவர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டும் என தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஆனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தற்போது போலி கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்டது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்