திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,822 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 800 கன அடியிலிருந்து, 1,517 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, பெரியாண்டாங் கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 1,251 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கனஅடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.32 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 33.53 கன அடியாக இருந்தது. கரூர் மாவட்டம் பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், காலை 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் மழை அளவு (மி.மீ.,) கரூர் 2, க.பரமத்தி, 21, கிருஷ்ணராயபுரம் 13.4, மாயனூர் 30 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 5.53 மி.மீ., மழை பெய்தது.
மாயனூர் கதவணைக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வருகை.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, ஒரு லட்சம் கன அடியை தாண்டியது. இதனால், அணை பகுதிகளில், மீன் வியாபாரம் களை கட்டி உள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த மே, 24 இல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 3,000 கன அடி முதல் அதிகபட்சமாக, 2.5 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள, அணைகளில் இருந்து, எதிர்பார்த்த அளவில் தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு, ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரி ஆற்றில் சேர்ந்து, மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது. இதனால் மதியம், 2:00 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 2,173 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதி குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 953 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி பாசனப் பகுதிகளில் அடுத்த மாதம், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், மாயனூர் கதவனுக்கு மீண்டும் வினாடிக்கு, ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மீன் விற்பனை ஜோர்
மாயனூர் கதவணையில் மீன் பிடி தொழில் விறுவிறுப்பாக உள்ளது. இதனால் கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் வாங்க மாயனூர் கதவணை பகுதியில் குவிந்தனர். பல்வேறு ரக மீன்கள் ஒரு கிலோ 100 முதல், 150 வரை விற்றது. அதை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.