கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது பெண் ஒருவர் தனது தந்தையால் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில், கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது சொந்த தந்தையே கொன்றதாகக் கூறப்படும் ஒரு கொடூரமான கௌரவக் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மான்யா பாட்டீல் என்ற 19 வயது பெண் கர்ப்பமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்த போதிலும், தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியபோது அவர் கொடூரமான முடிவை சந்தித்துள்ளார்.
மான்யா தனது பெற்றோரின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் பாதுகாப்புக்கு பயந்து, அவரும் அவரது கணவரும் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள ஹாவேரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.
திரும்பி வந்த அன்றே கொல்லப்பட்ட மகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மான்யாவின் குடும்பத்தினர், அவரது கணவர் மற்றும் மாமனாரை அவர்களது விவசாய நிலத்தில் பதுங்கியிருந்து தாக்கினர். ஆனால் அவர்கள் தப்பித்துவிட்டனர்.
பின்னர், மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை, இரும்புக் குழாய்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மான்யாவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரையே கொடூரமாக கொண்டு தாக்கினர். மான்யாவை கணவர் குடும்பத்தினர் பாதுகாக்க முயன்றபோது, தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களையும் கொடூரமாக தாக்கினர். இதில், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் படுகாயமடைந்த நிலையில், மான்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைவாக விசாரணை நடத்தி, மான்யாவின் தந்தை பிரகாஷ் ஃபக்கிர்கோடா மற்றும் இரண்டு நெருங்கிய உறவினர்கள் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர்.
முன்னதாக இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், பெண் வீட்டினர் கலப்புத் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் அவை தோல்வியடைந்தன. இளம்பெண் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு தேடி வருகிறது.