மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (டிசம்பர்: 22) தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா

சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக, பள்ளிக் கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பார்க் அவென்யூ பகுதியில் ரூ.438.88 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்கள்.

Continues below advertisement

நூலகக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்

சுமார் 14,811.26 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த மாவட்ட மைய நூலகம், தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மூன்று அடுக்குகளாகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன:

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான முக்கியத்துவம்

* தரை தளம்: நூலக அறை, வைப்பு அறை, புத்தக வாசிப்பு அறை, புத்தகம் வழங்கும் அறை, முகப்பு அறை, மின்சாதன அறை மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்படுகின்றன.

* முதல் தளம்: பொதுப்பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் பிரிவு மற்றும் இணைய வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிவு ஆகியவை இடம்பெற உள்ளன.

* இரண்டாம் தளம்: நூலக அலுவலக அறை, புத்தகச் செயலாக்க அறை, பல்நோக்கு அறை மற்றும் உணவறை வசதிகள் செய்யப்படுகின்றன.

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு நற்செய்தி

இந்த நூலகத்தின் சிறப்பம்சமாக, இரண்டாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகத் தனித்தனியான போட்டித் தேர்வறைகள் (Competitive Exam Rooms) கட்டப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அமைதியான சூழலில் தங்களது தேர்வுகளுக்குத் தயாராக முடியும்.

பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், மாவட்ட நூலக அலுவலர் சுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் பி.கல்யாணம், ஜெகவீரப்பாண்டியன், மயிலாடுதுறை நகர்மன்றத் துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர்மன்றக் குழு உறுப்பினர் சர்வோதயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் உதயமான பிறகு, கல்வி மற்றும் அறிவுத் தேடலில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இந்த நவீன நூலகம், நகரின் மையப்பகுதியில் (பார்க் அவென்யூ) அமைவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நூலகத்தின் முக்கியத்துவம்:

நாகப்பட்டினதாதில் இருந்து  மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்தவும், கிராமப்புற மாணவர்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யவும் இந்த மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் ஒரு 'அறிவுச் சுரங்கமாக' திகழும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.