திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளை போல் ஒரு சில நேரங்களில் குற்ற சம்பங்கள் நடப்பது உண்டு. அப்படி நடைபெறும் குற்ற சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்தவகையில் தற்போது ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில் கொள்ளை அடித்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். 


 


கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு பகுதியில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி குற்றச்சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது இன்று இரவு 10.30 மணியளவில் சிவசங்கர் என்ற கார் ஓட்டுநர் தன்னுடைய கார் உடன் நாகனஹல்லி பகுதியில் நின்று கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அவர் அருகில் வந்த தம்பதி ஒன்று தங்களை ஒரு இடத்தில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளனர். 


 


அதைத் தொடர்ந்து அவர்கள் கூறிய இடத்திற்கு கார் ஓட்டுநர் சிவசங்கர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த தம்பதி ஓட்டுநர் சிவசங்கரிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் தம்பதி ஓட்டுநருக்கு மது பாட்டீல் ஒன்றை கொடுத்து மது அருந்துமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. அதை ஏற்று ஓட்டுநர் சிவசங்கர் மது அருந்தியுள்ளார். இவர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. 


 


அதன்பின்னர் அதிகாலை 5.45 மணியளவில் மது போதை தெளிந்த பிறகு அந்த தம்பதி கார் ஓட்டுநர் சிவசங்கரை கீழே தள்ளிவிட்டு கார் மற்றும் அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களையும் திருடி சென்றுள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் சிவசங்கர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட தம்பதி தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவர்கள் இருக்கும் இடத்தையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 


 


இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அந்த தம்பதியை கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யார் என்று தெரியவந்துள்ளது. அதாவது இந்த குற்றத்தில் ஈடுபட்ட மஞ்சுநாத் (அ) மேக்கே மஞ்சு (27) மீது பல்வேறு வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த குற்ற சம்பவத்தை மஞ்சுநாத் மற்றும் அவருடைய மனைவி ஜோதி(25) ஆகிய இணைந்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மஞ்சுநாத் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் இரண்டு பிடி வாரண்ட் உள்ளதும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.