காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் தொடர்பாக ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த வெங்கச்சேரி இருளர் காலனியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி காமாட்சி பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பார்வையாளர் கூடத்தில் இருந்த மூர்த்தியின்  3 வயது குழந்தை சக்திவேல், மற்றும்  அவரது அண்ணன் ஏழுமலையின் 6 வயது மகள் சௌந்தர்யா ஆகிய இரு குழந்தைகளும் மருத்துவமனையில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

 



 

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

 

இது குறித்து மூர்த்தி, ஏழுமலை ஆகியோர் குழந்தைகள் காணவில்லை என விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் காணாமல் போன குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இரு குழந்தைகளையும் பெண் ஒருவர் ரயில்வே சாலை வழியாக அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


 

50 வயது மதிக்கத்தக்க பெண்மணி

 

சிசிடிவி காட்சியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இரு குழந்தைகளையும் அழைத்து செல்வது போல் உள்ளது. அந்த பெண் கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தைகளிடம் நன்றாக பழகி வந்ததாக மருத்துவமனையில் இருந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 


 

ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை

 

மேலும் காணாமல் போன இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்கும் பணியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். நாள்தோறும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஏராளமான ஒரு சிகிச்சைக்காக, வந்து செல்லக்கூடிய நிலையில், மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.



 

காவல்துறை சொல்வது என்ன ? 

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது :   புகார் வருவதற்கு முன்பாகவே, தகவல் அடிப்படையில் விசாரணையை துவங்கி விட்டோம்.  முதற்கட்டமாக அருகில் உள்ள சிசிடிவி   காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளோம். அடுத்தடுத்து கடைகள்  வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும்  கைப்பற்றி, விசாரணையை மேற்கொண்டு வருகின்றோம். விரைவில் குழந்தைகள்  மீட்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்