தாம்பரம் மாநகர்  மற்றும் சென்னை பெருநகர் மக்கள் 22 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பேரூரில் தாம்பரம் மாநகர் மற்றும் சென்னை பெருநகர் பகுதியில்  உள்ள 36 இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.4,276 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில்  தினமும் 400 மில்லியன் லிட்டர் (40 கோடி லிட்டர்) கடல்நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3 வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பதற்கான இடம் பேரூரில் தேர்வு செய்யப்பட்டு ஜெ.சி.பி. எந்திரம் மூலம் மேடுபள்ளங்களாக உள்ள இடங்களை சமன் படுத்தும் பணிகள் நடக்கிறது.  இந்த புதிய குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி நெம்மேலி பேரூர் பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டுகிறார்.



 

95 சதவித பணிகள்..

 

நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் இடம் சமன்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார். அதேபோல் நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82  லட்சம்மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன்லிட்டர்(15 கோடி லிட்டர்) திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது.  கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



 

மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள்கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் வடிகட்டப்பட்ட கடல்நீர்த்தேக்க தொட்டி, கடல்நீர் உந்துநிலையம்  ஆகியவற்றையும் அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வுசெய்தார். செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மூலம் திறக்கப்படும் இந்த புதிய குடிநீர் ஆலையின் 95 சதவித பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். 

 

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.என்.நேரு  கூறியதாவது:-

 

நெம்மேலியில் அமைய உள்ள 400 மில்லியன் லிட்டர் குடிநீர் ஆலை தென் பகுதி ஆசியா கண்டத்தின் மிகப் பெரிய குடிநீர் திட்டமாகும்.  முதல்வர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  இந்த திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர் சென்னை பெருநகரில் 35 பகுதிகளுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  மக்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம்  22 லட்சத்து 60 ஆயிரம் பேர்  பயனடைவார்கள்.  42 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க ஒப்பந்தந்த தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ள 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் 2-வது புதிய ஆலையை செப்டம்பர் மாதம் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.  சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.  விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் வடிகால் பணிகளை முதல்-அமைச்சரே நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.   



 

அமைச்சர் கே.என்.நேருவுடன், சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லேஷ்குமார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.