Sivasubramanian About Veerappan ABP Exclusive : நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி சீரிசாக வெளியாகி பல அறியப்படாத தகவல்களை வெளிக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆவணப்படம் தான் 'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்'. இது வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏற்கனவே இருந்த ஒரு பிம்பத்தை மாற்றி எழுதும் விதமாக பலருக்கும் இது தோன்றியதால் இது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.
தற்போது இது குறித்து வீரப்பனோடு உடன் பயணித்த ஒரு செய்தி புகைப்படக் கலைஞர் சிவசுப்பிரமணியன் சில பிரத்யேக தகவல்களை ஏபிபி நாடு-வுடன் பகிர்ந்து கொள்கிறார். வீரப்பன் வழக்கில் ரெக்கார்டுகளாக சாட்சியங்கள் மிகக் குறைவு என்பதால், பலரும் பல பொய்களையும் கட்டவிழ்த்து விட்டதாக இவர் கூறுகிறார்.
கேள்வி: வீரப்பனை சுட்டுப்பிடிக்கும் போது அவர் மீசையை எடுத்துவிட்டு தான் வந்து கொண்டிருந்தார் என்று காவல்துறை கூறுவது உண்மையா?
மீசையை அவ்வளவு நேசிக்கும் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதா?
பதில்: சாத்தியமே இல்லை! குறிப்பாக ஒரு சம்பவம். ராஜ்குமார் கடத்தல் முடிந்து அவரை விடுதலை செய்த பிறகு, ஒரு 15 நாள், சத்தியமங்கலம் பக்கத்தில் சிக்கரசம் பாலையம் பகுதியில் உள்ள காட்டில் இருக்கிறார். வீரப்பன் அங்குதான் இருக்கிறார் என்ற செய்தி அதிரடிப் படையின் உளவுப்பிரிவு ஒரு மாதம் முன்பே சொல்லி இருந்ததால் ராணுவ நடவடிக்கைக்காக அவரை நெருங்கி வருகிறார்கள்.
அப்போது அவரும் கூட்டாளிகளும், அவர் முற்றிலும் அதுவரை அவர் பயணிக்காத காடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்கிறார்கள். அதற்காக ஒரு வேனில் சபரிமலை பக்தர்கள் போல உடை அணிந்து, ஐயப்பன் பாடலை போட்டுக்கொண்டு அனைவரும் செல்கின்றனர். 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆறு மணிக்கு மேல் எல்லா வாகனங்களையும் சோதனை செய்வார்கள். அதனால் மீசையை மட்டும் எடுத்து விடலாம் என்று கேட்டதற்கு மறுத்துவிட்டார்.
பின்னர் லேசாக ட்ரிம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், வேண்டாம், செத்தாலும் பரவாயில்லை நான் மீசையோடே இருக்கிறேன் என்றார். அதன் பின் ஒரு மங்கி குல்லா வாங்கித்தந்து போட்டு அழைத்து வந்தார்கள். அந்த அளவுக்கு மீசை மீது பிரியம் வைத்திருந்தார். காவல்துறையுடன் இலங்கைக்கு செல்வதற்காக மீசையை எடுத்தார் என்று கூறுவது பொய்.
கேள்வி: காவல்துறை அவரை எப்படி சுட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: வீரப்பனை பிடிக்க ஒரு உளவு பார்க்கும் குழு அவரை கண்காணித்து கொண்டே இருந்தது. அதில் இருந்தது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள். அதிலும் ஒருவர் பின்னாளில் நீக்கப்பட்டார். இவர்கள் தான் அவரை நெருங்கி பின் தொடர்கிறார்கள். கடைசி கால கட்டத்தில் அவர் மனம் திருந்த முன் வருகிறார். அப்போது மாவோயிஸ்ட்களுடன் சேர முயல்கிறார். அதில் இருந்து ஒருவர் காவல்துறையிடம் பிடிபடுகிறார். அவரை இவர்களின் உளவாளியாக மாற்றுகிறார்கள். ஆவணப்படத்தில் கடைசியாக ட்ரேடர் என்று ஒருவர் வருவார், அவர்தான் இந்த உளவாளி. வீரப்பனுக்கு ஆயுதங்கள் தேவைப்படும்போது இவர் மூலமாக ஆயுதப்படையின் ஏகே 47 துப்பாக்கிகள் உள்ளே சென்றிருக்கிறது. ஆனால் ஏகே47 எடை அதிகம், அதனால் எங்களுக்கு சில கையெறி குண்டுகள் வேண்டும் என்று கேட்கிறார். அப்படி அதை ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் அவற்றை அப்படியே வைத்திருக்க முடியாது, செயலிழக்க செய்து வைத்திருக்க வேண்டும்.
தேவைப்படும்போது மீண்டும் செயல்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஐந்து குண்டுகளை செயலிழக்க செய்யும்போது அவர்கள் திட்டப்படி வீரப்பன் கையில் வைத்திருந்த குண்டு வெடிக்கிறது.
அது வெடித்ததில் அங்கிருந்த ஐந்து பேரும் மயக்கம் அடைகிறார்கள். ஸ்டென் கிரானைட் என்று கூறப்படும் அந்த குண்டுகள் மிகவும் ஆபத்தானவை. அந்த புகை நம்மை 8 மணிநேரம் வரை மயக்கத்தில் வைத்திருக்கும். அப்போது ஏற்கனவே திட்டமிட்டு அந்த இடத்திற்கு அருகே தங்கி இருந்த ஆயுதப்படை போலீசார் வந்து அவரை சுடுகின்றனர். அவர் இறந்தபோது மீசை குறைவாக இருந்ததற்கு காரணமும் அதுதான். குண்டு வெடித்தபோது அதிலிருந்து ஏற்பட்ட நெருப்பு அவர் மீசையை கொஞ்சம் பொசுக்கிவிட்டது, அவர் மீசையெல்லாம் எடுக்கவில்லை.
கேள்வி: அப்போது, ஆயுதப்படை வந்து அவரை ஆம்புலன்சில் கூட்டி செல்வதுபோல கூட்டிச்சென்று அவரை சுட்டுக் கொன்றதெல்லாம் பொய்தான் இல்லையா?
பதில்: முழுக்க பொய்தான். அவர் இந்த நிகழ்வால் தான் மயங்கினார். பிடிபட்டார். பிணவறையில் நான் எடுத்த புகைப்படங்களில் அவரது கையில் வெடித்த காயம் இருப்பது தெளிவாக தெரியும். ஆனால் அதனை திட்டமிட்டு மறைப்பார்கள். அவரை சுட்டதாக போலீஸ் கூறுவது முழுக்க பொய். ஒரு சம்பவம் நடந்தால் அங்கு இருந்தார்கள் அனைவரும் ஒரே மாதிரி சொல்ல வேண்டும் அல்லவா, ஆனால் இந்த வழக்கில் விஜயகுமார் ஒரு மாதிரியும், செந்தாமரைக்கண்ணன் ஒரு மாதிரியும் கூறுகிறார்கள். இதில் இன்னும் 12 பேர் இருக்கிறார்கள். 13 வதாக டிஎஸ்பி ஹுசைன் சாரும் இருக்கிறார். எல்லோருமே ஒவ்வொரு கற்பனையை கூறுகிறார்கள். இதில் இன்னொரு விஷயம் அந்த வேனுக்குள் ஹேன்ட் கிரானைட்டை எறிந்து வெடிக்க வைத்து பின்னர், துப்பாக்கியை எடுத்து சுட்டதாக விஜயகுமார் கூறுகிறார். அந்த குண்டு வெடித்த பிறகு ஏன் சுட வேண்டும். அவர்கள் தான் 8 மணிநேரம் வரை மயங்கி இருப்பார்களே. எதற்காக துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்?
கேள்வி: காவல்துறை ஏன் பொய் கூற வேண்டும்?
பதில்: இந்த உண்மைகளை வெளியே சொன்னால் இவர்கள் ஜீரோ ஆகிவிடுவார்கள். இதில் போலீஸ் பங்களிப்பு எதுவுமே இருக்காது. இந்த ஆபரேஷனை முழுக்க முழுக்க செய்தது துரைபாண்டியன் என்னும் சப் இன்ஸ்பெக்டர். அவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. வெளிக்காட்டினால் அவருடைய உளவாளி யார் என்று தெரிந்துவிடும். வீரப்பனை காட்டிக்கொடுத்த குடும்பம் என்ற பெயர் அவர் சந்ததியினரை துரத்தும்.
இன்னொன்று தமிழ்நாடு காவல்துறைக்கு உதவி செய்த ஒருவரை காட்டிக்கொடுத்தல் மிகப்பெரிய வரலாற்று அசிங்கம் ஆகி விடும். அதனால் என்னை காட்ட வேண்டாம் என்று வெளியேறுகிறார். அவர் வெளியேறிய உடன் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஆளாளுக்கு அந்த கிரெடிட்டை எடுத்துக் கொள்கிறார்கள். அந்த 12 பேருக்கு ஜனாதிபதி விருது வேறு கொடுத்தார்கள். அதெல்லாம் மிகக் கேவலமான விஷயம். அந்த விருதையெல்லாம் திரும்ப வாங்கணும். இவ்வளவு பொய் பேசுபவர்களுக்கு இந்த அவர்டை கொடுத்தால், அந்த அவர்டுக்கான பெயர் கெட்டுப்போய்விடும்.
இன்னும் பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ABP நாடு யூட்யூப் தளத்தில் உள்ளது:
கேள்வி: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள, 'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்' ஆவணப்படம் சரியான முறையில், நடுநிலையோடு எடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?
கேள்வி: வீரப்பனை காட்டை அழித்தார் என்கிறார்கள், சிலர் வனக்காவலர் என்கிறார்கள். உங்கள் பார்வையில் வீரப்பன் வனக்காவலரா? கொடுமையான மனிதரா?
கேள்வி: வீரப்பன் தந்தங்களை வெட்டினார், சந்தனமரங்களை கடத்தினார், அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சேர்த்து வைத்தார் என்கிறார்கள். ஆனால் அவர் இறந்தபின் அந்த பணமெல்லாம் எங்கே போனது? அப்படி பணம் இருந்திருந்தாலும் அவர் ஏன் அந்த காட்டில் இருந்து சிரமப்பட வேண்டும்?
கேள்வி: இப்போது இருக்கிற தமிழ்நாடு அரசு, இந்த விஷயத்தில் விசாரணையை தொடங்கி உண்மையை சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பில்லையே
வீடியோ லிங்க்: