தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்றிதழ் வழங்கி காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்து வந்த ஷாலினிவேலுவை மாவட்ட நீதிமன்றம் பதவியில் நீடிக்க தற்காலிகத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

காஞ்சிபுரம் மாநகராட்சி

 


சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மாவட்டம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் நகராட்சி கடந்த தேர்தலின் பொழுது தரம் உயர்த்தப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. 51 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக காஞ்சிபுரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்டோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்று மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றனர்.

 


போலி சாதிச்சான்றிதழ் வழங்கி மாமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க தற்காலிகத் தடை, காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு


 

 

காஞ்சிபுரம்  - 27 வது வார்டு

 

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர் தேர்தலில் 27 வது வார்டு உறுப்பினராக, சுயேச்சையாக தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாலினி வேலு. இவருக்கு போட்டியாக அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் விஜயகுமாரி. மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றதால் இவர் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். மாமன்றத்தில் நடக்கும் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

 


தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலி சாதிச்சான்றிதழ் வழங்கி காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக இருந்து வந்த ஷாலினிவேலுவை மாவட்ட நீதிமன்றம் பதவியில் நீடிக்க தற்காலிகத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


 

 

போலிச்சான்றிதழ் வழங்கியதற்கு அடிப்படை முகாந்திரம்

 

இவர் மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலின் போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற போலியான சாதிச்சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் என்றும் இவரது வெற்றி செல்லாது எனவும் அவருக்கு எதிராக போட்டியிட்ட விஜயகுமாரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கானது காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு. செம்மல் முன்னிலையில் நடந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் போலிச்சான்றிதழ் வழங்கியதற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார்.

 

காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

மேலும் அவர் வழங்கிய தீர்ப்பில் ஷாலினிவேலு மாமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்கவும், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவும் தற்காலிகத் தடை விதித்து மாவட்ட நீதிபதி யு.செம்மல் தீர்ப்பளித்துள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் கூட பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஒருவர் செயல்படுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.