மதுரை மாநகரில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் துறையினரால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 54 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 வாள், 22 கத்தி, 5 அரிவாள் உட்பட மொத்தம் 44 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் தொடர்சியாக மதுரை மாநகரில் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், ஆயுதங்கள் விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் ஆயுதங்கள் வாங்க வருபவர்கள் விபரங்கள், விலாசம், தொலைபேசி எண், என்ன காரணத்திற்காக ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்ற விபரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரித்து வர வேண்டும் எனவும், மேலும் கடைகளில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி அதன் பதிவுகளை பராமரித்து வரவேண்டும் எனவும் ஆயுதங்கள் வாங்க வருபவர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படுமானால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் ரவுடிகளை கட்டுபடுத்துவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து சந்தேகப்படும்படியாக ஆயுதங்களுடன் யாராவது ஆட்டோவில் பயணம் செய்ய வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மதுரை மாநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல் ரவுடிகளை ஒழிக்கும் விதமாக நெல்லை மாவட்டத்தில் அரிவாள் செய்யும் பட்டறைகளை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்களை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை செய்யும் பட்டறைகளை அந்தந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அரிவாள் செய்யும் பட்டறை முழுவதும் சி.சி.டி.வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டறைக்கு வந்து செல்கிறவர்கள் குறித்த முழு விபரங்கள் சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!