2990 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முந்த்ரா அதானி துறைமுகத்திற்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதை விசாரிக்க மத்திய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகத்துக்கு போதைப்பொருட்கள் குறித்து விசாரிக்கும் குஜராத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா அதானி துறைமுகத்துக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,990 கிலோ போதைப்பொருட்கள் கடத்தப்பட்டன. ‘முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் டால்கம் பவுடர்’ எனும் பெயரில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. அதனைக் கைப்பற்றி போதைப்பொருள் பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த விஜயவாடா முகவரிக்கு சென்று அங்கு வசித்து வந்த துர்கா, அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, குஜராத் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த போதைபொருட்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரிக்க கூடுதல் மாவட்ட நீதிபதி சிஎம் பவார் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து சரக்குகள் அனுப்பப்படும்போது அவற்றை சோதனை செய்யவும், ஸ்கேன் செய்யவும் என்னவிதமான வழிமுறைகள் அதானி துறைமுகத்தில் பின்பற்றப்படுகிறது. இந்தக் கடத்தலில் துறைமுக நிறுவனத்திற்கும், அதிகாரிகளுக்கும் என்ன பங்கு இருக்கிறது, என்ன பலன் இருக்கிறது ஆகியவற்றை விசாரிக்க வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


மேலும், ஹெராயின் கைப்பற்றப்பட்ட விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். ஆந்திராவின் விஜயவாடாவை முகவரியிட்டு வந்த சரக்குப் பெட்டகம் குஜராத்தில் இறக்கப்பட்டது ஏன். விஜயவாடாவிற்கு சென்னை துறைமுகம் போன்றவை மிக  அருகிலிருக்கும்போது வெகுதொலைவில் உள்ள முந்த்ரா அதானி துறைமுகத்தை கடத்தல்காரர்கள்  தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


கடந்த 2 ஆண்டுகளாகவே குஜராத்தின் கடல் பகுதி குறிப்பாக கட்ச் மாவட்டத்தின் கடல் பகுதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மையமாக மாறியுள்ளது என்றும், கடத்தலில் ஈடுபட்ட ஆஷி ட்ரேடிங் நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அதானி துறைமுகத்தின் நிர்வாகம் மற்றும் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 


 குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருவதால் போதைப்பொருள் கடத்தலில் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது. அதில் எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.