'தளபதி 66’ திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 26ஆம் தேதி வெளியானது.


இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதுதொடர்பான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில், “அதிகாரப்பூர்வமாக்க நாங்கள் காத்திருந்த செய்தி. எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். தளபதியுடன் மதிப்புமிக்க தளபதி 66-ஆவது படத்தை தயாரிப்போம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” எனப் பதிவிடப்பட்டது.


இதேபோல், இயக்குநர் வம்சி தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் 'தளபதி 66’  படம் எனது அடுத்த படம்  என்ற தகவலை உங்களுடன் பகிர்கிறேன். இந்த படத்தை தில்ராஜு, ஹிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்’ எனப் பதிவிட்டிருந்தார். 


 






'தளபதி 66’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தமன் இசை என்பதால், இந்தப் படத்திற்கும் அவரே இருப்பார் என்றும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து முருகதாஸ் இயக்கவிருந்த படத்திற்கு தமன் இசையமைக்கப்போவதாக தகவல் வெளியானது. விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தமனே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், இந்தப் படம் கைவிடப்பட்டதால், விஜய்க்கு தமன் இசையமைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.


 






வம்சி முன்னதாக கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் வம்சியிடம் தளபதி 66 குறித்த அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ விரைவில் அதுகுறித்த அப்டேட் உங்களை வந்து சேரும் அப்போது நீங்கள் படம் குறித்து தெரிந்துகொள்ளலாம். இப்போதே நாங்கள் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உங்கள் எதிர்பார்ப்பை நீர்த்துப்போக செய்ய விரும்பவில்லை “ என குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.



தளபதி 66 படத்தின் பூஜையை அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டு,படப்பிடிப்பை அடுத்த ஆண்டு  தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு. படத்தை 2022 தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.